ஆண்டுக்கு டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்! லிஸ்ட் எடுத்த தவெக! அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு தகவல்!
Rs 3600 crore corruption in TASMAC per year The list was taken by Tvk Minister Vignesh makes sensational news
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், கடந்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே அரசின் முக்கிய இலக்கு என்றும், அதற்காக முதலமைச்சர் முழு சுதந்திரத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், சில இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது கவலைக்குரியது என்றார்.
"போதைப்பொருள் விநியோக சங்கிலியை முற்றிலும் உடைக்க வேண்டும். தமிழ்நாட்டிற்குள் எந்த வழியிலும் போதைப்பொருள் நுழைய அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் உறுதியளித்தார்.
டாஸ்மாக் நிர்வாகம் குறித்து பேசிய அமைச்சர் விக்னேஷ், கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.
"டாஸ்மாக்கில் மாதத்திற்கு சுமார் ரூ.100 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ.3,600 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது. இந்தப் பணம் தனிநபர்கள் மற்றும் அரசியல் தொடர்புடையவர்களின் கைகளுக்கு சென்றுள்ளது. மதுபான விற்பனையில் மட்டுமல்ல, கொள்முதல் செயல்முறைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன" என்றார்.
மேலும், டாஸ்மாக் தொடர்பான பல ஊழல் விவகாரங்கள் படிப்படியாக வெளிக்கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது குறித்து எழுந்துள்ள புகார்களுக்கு பதிலளித்த அமைச்சர், இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
"ஜூன் மாத இறுதிக்குள் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி மதுபானங்கள் விற்கப்படுவதை முற்றிலும் தடுக்கப்படும். கூடுதல் தொகை வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அரசு ஏற்கனவே 717 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
மேலும், கடந்த ஆண்டுகளில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த 600 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை உருவாக்க அரசு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
"டாஸ்மாக் மட்டுமல்ல, எந்தத் துறையிலும் இனி ஊழல் இருக்காது என்பது அரசின் நிலைப்பாடு. ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
டாஸ்மாக் நிர்வாகம், மதுபான விற்பனை மற்றும் ஊழல் குறித்த அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Rs 3600 crore corruption in TASMAC per year The list was taken by Tvk Minister Vignesh makes sensational news