புதிய நீர்வள மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்துங்கள் - மருத்துவர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நிலவி வரும் கடும் கோடை வெப்பத்தையும், அதன் விளைவாக அதிகரித்துள்ள நீர் தட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு மிக முக்கியமான வேண்டுகோளை முன்வைக்கிறேன். மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட முதலாவது நீர்நிலைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த நீர்நிலைகளில் சுமார் 50,197 நீர்நிலைகள், அதாவது 46.9 சதவீத நீர்நிலைகள் பயன்பாடற்ற நிலையில் இருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. குறிப்பாக, கணக்கெடுக்கப்பட்ட 1,06,957 நீர்நிலைகளில் பாதிக்கு நெருக்கமானவை வறட்சி, தூர்ந்து போதல் மற்றும் உவர்தன்மை காரணமாக செயலிழந்து கிடப்பது நமது மாநிலத்தின் எதிர்கால நீர் பாதுகாப்பிற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும்.

தற்போது நிலவும் இந்த வறட்சியான கோடை காலத்தை ஒரு இக்கட்டான சூழலாக மட்டும் பார்க்காமல், இழந்த நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாகத் தமிழக அரசு கருதிச் செயல்பட வேண்டும். ஏரிகள் மற்றும் குளங்கள் வறண்டு காணப்படும் இந்தச் சூழலில் தான், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதும் எளிதான காரியம். எனவே, வரவிருக்கும் பருவமழை காலத்திற்கு முன்னதாகவே, பயன்பாட்டில் இல்லாத இந்த 50,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் ஆழப்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு 5,000 சிறுபாசனக் குளங்களைப் புனரமைப்பதாகத் திட்டமிட்டிருந்தாலும், மாநிலம் முழுவதும் உள்ள 14,141 பெரிய பாசன ஏரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற ஊரணிகளின் நிலை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. 2026-27 ஆம் ஆண்டின் கொள்கை விளக்கக் குறிப்புகளில் நீர் மேலாண்மைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது, கடைக்கோடி கிராமத்தில் உள்ள நீர்நிலைகளையும் சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும். வெறும் டெண்டர் அறிவிப்புகளோடு நின்றுவிடாமல்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உள்ளூர் தொழிலாளர்களை முழுமையாகப் பயன்படுத்தி, நீர்நிலைகளின் வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்கவும், கரைகளைப் பலப்படுத்தவும் அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

நீர்நிலைகளைப் பாதுகாப்பது என்பது தமிழகத்தின் விவசாயத்தையும், குடிநீர் தேவையையும் காக்கும் உயிர்நாடிப் பணியாகும். ஆகவே, தமிழக அரசு உடனடியாகச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய நீர்வள மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். வரும் பருவமழை காலத்தில் பெய்யும் ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தத் தேவையான அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் இந்த மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk ramadoss TVK Govt


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->