தமிழனின் 3080 கோடி ரூபாய் பணம்., 10 மாதங்களில் 23 பேர் தற்கொலை., அன்புமணி தலைமையில் தொடங்கியது அறப்போராட்டம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம்  ரூ. 10,100 கோடி. நடப்பாண்டில் இது ரூ.15,400 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வருவாய் ரூ.38,500 கோடியாக உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்லைன் சூதாட்ட வருமானத்தில் குறைந்தது 20 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுகிறது. அப்படியானால், நடப்பாண்டில் தமிழ்நாட்டிலிருந்து ரூ.3,080 கோடி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களால் பறிக்கப்படும்; அடுத்த இரு ஆண்டுகளில் இது ரூ.7,700 கோடியாக அதிகரிக்கும். 

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் மிக அதிக பணத்தை இழக்கும் மாநிலம் தமிழ்நாடாகத் தான் இருக்கும் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களால் பறிக்கப்படுவது தமிழ்நாட்டு மக்களின் பணம்  மட்டுமல்ல.... லட்சக்கணக்கான குடும்பங்களில் நிம்மதி மற்றும் வாழ்வாதாரமும் தான். ஆன்லைன் சூதாட்டங்கள் இந்தியாவில் 2014-ஆம் ஆண்டில் அறிமுகம் ஆயின. அதற்கு பிறகு 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 60-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். 

அதன்பின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இயற்றப்பட்டதால் 10 மாதங்கள்  தற்கொலைகள் எதுவும் நிகழவில்லை. ஆனால், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த 10 மாதங்களில் மட்டும் 22 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து தொடர்ந்து போராடி வரும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்த அறிக்கையில், "ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகள் அனைத்தையும் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தத் தீமையிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் அறிவுரைப்படி, திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுவது தான் அதற்கான தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு மறுக்கிறது.

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்  செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு சென்றிருப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை 1867-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பொது சூதாட்டச் சட்டத்தின்படி (The Public Gambling Act  1867) ஆன்லைன் சூதாட்டங்களை திறன் சார்ந்த விளையாட்டாகவே பார்க்கிறது. 

அதனால் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து மராட்டியம், இராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் இயற்றிய சட்டம் செல்லாது என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டிலும் இதே தீர்ப்பு தான் வருவதற்கு வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. 

ஆன்லைன் சூதாட்டங்கள் திறன் சார்ந்தவை அல்ல; அவை வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்தவை என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டால் தான் அதை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளும். அத்தகைய சட்டத்தை உருவாக்கி அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டும் என்று தான் பாமக வலியுறுத்தி வருகிறது.

ஆனால், இது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து உறுதியான பதில் வராத நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து அவசர சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்தி, அறப்போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது" என்று தெரிவித்து இருந்தார்.

அதன்படி, இன்று சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் இந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையேற்று நடத்தி வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று கியரால் எழுப்பி வருகின்றனர்.

மேலும், பொது நலனில் அக்கறை கொண்டோரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

பாமக போராட்டம் காரணமாக எழும்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிப்பு பணியில் சிறப்பு அதிரடி படை போலிஸ் ஈடுபடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK PROTEST fOR Ban Online Gambling


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->