ஆட்சி தொடர வேண்டும்.! ஓபிஎஸ்., இபிஎஸ்., பரபரப்பு கடிதம்.! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாளில் அவரின் வழியில் அதிமுக ஆட்சி தொடர அயராது உழைத்து வெற்றி காண்போமென உறுதியேற்போம் என்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ . பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் கூட்டாக அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "அதிமுக நிறுவனத் தலைவர் பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் பொன்னாள்! 

அன்பார்ந்த கழக உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். எளியோரை இரட்சிக்க வந்த இதய தெய்வம், ஏழைகள் வாழ்வில் இருள் நீக்க உதித்த ஒளி விளக்கு, ஒழுக்க நெறிகளை கலைத் துறையால் பயிற்றுவித்த கலங்கரை விளக்கம், உழைப்பவர் எல்லாம் உயர்ந்தவரே என்ற உண்மையை உரக்கச் சொன்ன தனிப் பிறவி, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் விழா, உலகில் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் மகத்தான திருவிழா. “தன்னை தலையாகச் செய்வானும் தான்'' என்று சங்கத் தமிழ் கூறும் வாழ்க்கை நெறிக்கு சிறந்த எடுத்துக்காட்டு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள். வறுமையின் கோரப் பிடியில் வாடிய இளமைக் காலத்தில் தொடங்கி, புகழ் ஏணியின் உச்சத்தைத் தொட்டு, நாடாளும் மன்னனாக வாழ்வை நிறைவு செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உழைப்பாலும், முயற்சியாலும், தன்னலம் துறந்து, பிறர் நலம் பேணி வாழ்ந்த வாழ்க்கை முறையாலும் “மனிதர்களில் மாணிக்கம்” என்ற இரவாப் புகழ் பெற்ற சரித்திர நாயகர். திரை உலகில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை சொந்தமாக்கிக்கொண்ட புரட்சித் தலைவர், தனது உழைப்பும், புகழும் மக்களுக்கு நல்ல கருத்துகளையும், அறநெறிகளையும் கொண்டு சேர்க்கும் வலுவான ஆயுதங்களாகப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 


திரைப்படங்களின் மூலம், குறிப்பாக பாடல்களின் மூலம் , புரட்சிகரமான சிந்தனைகளையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் எடுத்துச் சொன்னதில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நிகராக இன்னொரு மனிதரை உலகில் வேறு எங்கும் காண முடியாது. 

புரட்சித் தலைவரின் திரைப்படங்கள் காட்டப்பட்டபோது , திரையரங்குகள் எல்லாம் வகுப்பறைகளாக அல்லவா மாறி இருந்தன. 

கல்லாதபேரையெல்லாம் கல்வி பயிலச் 
செய்து காண்பதில் தான் இன்பம் என்தோழா! - என்றும், 
ஒன்று எங்கள் ஜாதியே, 
ஒன்று எங்கள் நீதியே, 
உழைக்கும் மக்கள் யாவரும் 
ஒருவர் பெற்ற மக்களே - என்றும் பாடி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போல, கலைவழிப் பாடம் நடத்திய “வாத்தியார்” யாரேனும் இருக்க முடியுமா? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், தான் சொன்னதையெல்லாம் செய்தும் காட்டிய செயல் வீரர். 

உலகமே போற்றும் சத்துணவுத் திட்டம்; பெண்மையைப் போற்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; தலைமுறை, தலைமுறையாக பள்ளத்தில் வீழ்ந்து கிடந்த பலகோடி மக்கள் வாழ்வில் ஏற்றம்பெற, இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 69 விழுக்காடு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு; கிராமப்புறங்களில் நிலவிய அடிமைத்தனங்களுக்குக் காரணமாயிருந்த நிர்வாக முறையை முற்றிலும் ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் (VAO) என்னும் புதுப் பதவிகள் மூலம் நிர்வாகத்தை மக்கள் கையில் கொண்டுசேர்த்த மனிதாபிமானப் பணி; மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை தோற்றுவித்து, உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற சதிவலை பிண்ணிய சாதிப் பெயர்களை பொது வெளிகளில் இருந்து நீக்கிய சமூகப் புரட்சி; கம்ப்யூட்டர் காலத்திலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் என்றெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நிகழ்த்திய சாதனைகள், வேறு யாராலும் அத்தனை எளிதாக செய்திட முடியாத அரும் பெரும் சாதனைகளாகும். 

எனவே தான், அவர் மக்கள் மனதில் புரட்சித் தலைவராகவும், பொன்மனச் செம்மலாகவும் அன்பு சிம்மாசனம் போட்டு மன்னாதி மன்னனாக வீற்றிருக்கிறார். புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் வழங்கிய மாபெரும் கொடையாக வந்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். புரட்சித் தலைவர் ஆட்சியின் நீட்சியாகவும், அவர் திட்டமிட்டிருந்த சமூகப் புரட்சிகளையும், வளர்ச்சிகளையும் நடைமுறைப்படுத்தும் கலைகளை அறிந்தவராகவும் சிறப்பாக ஆட்சி செய்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் இன்றும், இனிவரும் காலங்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வெற்றிநடைபோடும் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்." என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops eps write letter to admk members mgr Bday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->