சிறுகனூர் மாநாட்டில் புதிய அறிவிப்புகள்...? முதல்வர் வெளியிடுவார்...! - கே.என்.நேரு பரபரப்பு தகவல்
New announcements Sirukanur conference Chief Minister announcement KN Nehru sensational news
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள சூழலில் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் திருச்சி அருகே உள்ள சிறுகனூரில் வருகிற 9-ந்தேதி தி.மு.க.வின் 12-வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலிருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விசாலமான மாநாட்டு திடல் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.மாநாட்டு திடலில் 10 பிரம்மாண்ட நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பெரும் கூட்டத்தை கருத்தில் கொண்டு மிகப்பெரிய மேடை அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அமருவதற்காக ஆயிரக்கணக்கான நாற்காலிகள் அடுக்கி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
மாநாட்டு வளாகம் முழுவதும் வண்ணமயமான மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், தொண்டர்கள் வசதியாக அமர சிவப்பு நிற கம்பளங்களும் விரிக்கப்பட்டு விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.மேலும் மாநாட்டு திடலின் மூன்று பக்கங்களிலும் தி.மு.க. அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கும் பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் அண்ணா, கலைஞர், பெரியார் ஆகிய முன்னோடிகளின் படங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.இந்த நிலையில், தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று மாநாட்டு திடலுக்கு நேரில் சென்று நடைபெற்று வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் 9-ந்தேதி மதியம் 3 மணியளவில் கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கும் என்றும், மாலை 5.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைப்பார் என்றும் தெரிவித்தார்.
மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இதே இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட 7 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் அறிவித்தது அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தேர்தலில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்றும் அவர் நினைவுபடுத்தினார்.
அதேபோன்று இந்த மாநாட்டிலும் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன் வரவிருக்கும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவுள்ள சில முக்கிய திட்டங்கள் இம்மாநாட்டில் முன்கூட்டியே அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களையே முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் கே.என்.நேரு தெரிவித்தார்.
செயல்படுத்த இயலாத வாக்குறுதிகளை அறிவிப்பது சரியான நடைமுறை அல்ல என்றும், மக்கள் நலனுக்காக செயல்படுத்தக்கூடிய திட்டங்களே அறிவிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வின் போது மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., திருச்சி மேயர் அன்பழகன், ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ., பொருளாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், அவைத் தலைவர் அம்பிகாபதி, குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர் கமால் முஸ்தபா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
English Summary
New announcements Sirukanur conference Chief Minister announcement KN Nehru sensational news