தலைமை தகுதிக்கு ஒரு தராசு வேண்டாமா..? இந்தியா கூட்டணி தலைமை குறித்து மு,க. ஸ்டாலினை விளாசிய நாஞ்சில் சம்பத்..!
Nanjil Sampath slams MK Stalin on India alliance leadership
இந்தியா (I.N.D.I.A) கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சியின் 'சாம்னா' நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.
இதற்கு 'நாட்டின் கதியை நினைத்து ரத்தக் கண்ணீர் தான் வருகிறது' என தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தலைமை தகுதிக்கு ஒரு தராசு வேண்டாமா..?
இண்டி (I.N.D.I.A) கூட்டணிக்கு அண்ணன் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்று சிலர் பிதற்றுகிறார்கள். இதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு வரவில்லை, நாட்டின் கதியை நினைத்து ரத்தக் கண்ணீர் தான் வருகிறது! தமிழகத்தின் திசையெங்கும் திராவிட மாடல் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, திக்கெட்டும் வெறும் விளம்பர வெளிச்சத்திலேயே காலத்தைக் கடத்தும் ஒரு விடியல் அரசு, இப்போது தேசிய அரசியலுக்கு வழி தேடப் போகிறதாம்! கதர் சட்டையை குறைத்து மதிப்பிடுகிறார்களா?

மதிப்பிற்குரிய முதல்வர் அவர்கள், கையில் குறிப்பு எடுத்துத் தராமல் மேடையில் ஒரு நிமிடம் கூட பேசத் தெரியாதவர். அகில இந்தியத் தலைவர்களுக்கு ஆலோசனைக் கூறப் போகிறாராம். பீகாரில் பரப்புரை தாக்கத்தை நாடு பார்த்ததே. தமிழ்நாட்டிலேயே விடிவெள்ளி எப்போது வரும் என்று மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் தேசிய அளவில் டார்ச் அடிக்கப் போவதாகக் கிளம்பிவிட்டார்கள்.
கொள்கைக் குன்றாக, மக்களின் நாடித்துடிப்பை அறிந்த தலைவர் விஜய் அவர்கள் களமிறங்கிய பிறகு, பலருக்குக் கை, கால் நடுக்கம் எடுக்கத் தொடங்கிவிட்டது. அதிலிருந்து தப்பிக்கவே 'தேசியத் தலைமை' என்கிற பொருந்தா பட்டத்தை சூட்டி, இவரை இங்கிருந்து அனுப்பிவிட சிலர் துடிக்கிறார்கள் போலிருக்கிறது.
தலைமை என்பது பெறுவது அல்ல; அது தகுதியால் தானாக சேர வேண்டிய இடம். இங்கே பலருக்கு தகுதியே தட்டுப்பாடாக இருக்கும்போது, தலைமைக்கு ஆசைப்படுவது 'ஆகாசத் தாமரைக்கு' ஆசைப்படுவது போன்றது! சரிதான், தாமரை அவர்களுக்கு பிடித்த ஒன்று தானே..'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nanjil Sampath slams MK Stalin on India alliance leadership