ஜல்லிக்கட்டு வழக்கு நினைவிருக்கா? யார் இந்த அஜய் ரஸ்தோகி? சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி!
Karur Stampede TVK Vijay
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
ஆனால், மாநில காவல்துறை மட்டுமே உள்ள குழுவில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து, தமிழ்நாடு வெற்றிக்கழகம் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தை அணைந்தது.
நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு இன்று இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது, தவெக தரப்பு “நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியது.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இது இடைக்கால உத்தரவு எனவும், சிபிஐ விசாரணை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் குழுவின் கண்காணிப்பில் நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அந்த குழுவில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்; ஆனால் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அஜய் ரஸ்தோகி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 2004 முதல் 2018 வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். 2018 முதல் 2023 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த அவர், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாகவும், கருணைக் கொலை உரிமை மற்றும் திருமணத்திற்கு வெளியான உறவுகள் குற்றமல்ல என்ற தீர்ப்புகளிலும் பங்கு பெற்றவர்.