கொள்ளிக்கட்டையால் தலை சொரிகிறதா அதிமுக.? நாட்டை உலுக்கும் அச்சுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,"ஜனநாயகம், சமதர்மம், மதச்சார்பின்மை, சமுக நீதி, கூட்டாட்சித் தத்துவங்களுக்கு எதிரான பல ‘கண்ணிவெடிகள்’ தயாராகி பூமிக்கடியில் புதைக்கப்படுவது போன்ற, ஆபத்தானவை அணிவகுத்து நிற்கின்றன" என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பதவியேற்று 20 நாள்களே ஆகியுள்ள காலகட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை அடுக்கடுக்காக நிறைவேற்றிட மோடி அரசு, தனக்குள்ள பெரும்பான்மை என்ற மிருகப் பலத்தினை நம்பிக்கொண்டும், ஊடகங்கள் தங்கள் வயப்படுத்தப்பட்டுள்ளன என்ற ஒத்துழைப்பை நம்பியும், துணிந்து, புயல் காற்று வேகத்தில் செயலாற்றத் தொடங்கிவிட்டது.

பல ‘கண்ணிவெடிகள்’ தயார்.!
ஜனநாயகம், சமதர்மம், மதச்சார்பின்மை, சமுக நீதி, கூட்டாட்சித் தத்துவங்களுக்கு எதிரான பல ‘கண்ணிவெடிகள்’ தயாராகி பூமிக்கடியில் புதைக்கப்படுவது போன்ற, ஆபத்தானவை அணிவகுத்து நிற்கின்றன!

1. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால், மாநிலங்களின் கல்வி உரிமை, பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பன்மொழிகள் உள்ள பரந்த இந்தியாவினை ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் மட்டுமே ஆட்சி புரியும் என்பது போன்று, திணிக்கப்படுகிறது.

21, 22 ஆம் நூற்றாண்டுகளை நோக்கி, முன்னே செல்லவேண்டிய கல்வித் திட்டம் - புராதன கலாச்சாரம் என்ற பெயரில் வார்த்தை ஜாலங்களால் மூடப்பட்டுள்ள சர்க்கரை பூசிய விஷ உருண்டையேயாகும். ஆர்.எஸ்.எஸ். கொள்கைத் திட்டங்கள் ஒவ்வொன்றும் அவசர அவசரமாக செயல்பட வேகப்படுத்தப்படுகின்றன.

இதே வரிசையில் அடுத்த பெரிய அறிவிப்பு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் ஒற்றைக் கலாச்சார - ஒற்றை அதிகாரத் தலைமைக்கு வழிவகுக்கப்படும் யோசனையே, ஒரே தேர்தல் - மாநிலங்களுக்கும், மத்திய ஆட்சிக்கும் என்று வழிவகை செய்யும் முறையில், அரசியல் அமைப்பின் அடிக்கட்டுமானத்தை உடைக்கும் ஆபத்தான போக்கு இது.

ஒரே நாடு - ஒரே தேர்தல்:  இதன் பின்னணி என்ன?

Image result for veeramani seithipunal

இதன் ஒரே முக்கிய நோக்கம்:

1. மாநிலங்களையே - மாநில உரிமைகளையே பறித்தல் - கூட்டாட்சியை மாற்றி (Federal Set up) ஒற்றை ஆட்சியாக (Unitary System) மாற்றுவதுதான்.

2. மாநிலக் கட்சிகள் செல்வாக்கு பெறும் தற்போதுள்ள நிலையை முற்றாக அழிக்கும் இந்த ஆபத்தான யோசனை நடைமுறைக்கு ஒவ்வாத திட்டமாகும்.

3. தேசியக் கட்சிகள் எனப்படுபவைகளில் இன்று பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எல்லாவற்றையும் ஒப்பிட்டால், பாஜக தவிர மற்ற பெயரில் உள்ள தேசியக் கட்சிகள், நடைமுறையில் சுருங்கிவிட்டன.

4. இது மறைமுகமாக அதிபர் ஆட்சி முறையை ஏற்படுத்தும் முன்னோட்டம் ஆகும்!
நமது அரசியல் சட்ட கர்த்தாக்கள் பின்பற்றிய முறை பிரிட்டிஷ் கேபினட் முறை (Cabinet System)யேயாகும்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முறை நம்முடைய அரசியல் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று.
அதிபர் ஆட்சி முறை பிரகடனப்படுத்தப்பட்டால் மாநிலக் கட்சிகள் தங்கள் முடிவைத் தேடிக் கொண்டதாக ஆகும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செல்வாக்கு, வாக்கு வங்கி உடைய கட்சிகள்தான் வேட்பாளர்களை அப்போது தேர்தலில் நிறுத்த முடியும். இது மாநிலக் கட்சிகளுக்கு  எப்படி முடியும்? அனைத்திந்திய அண்ணா திமுக என்று பெயரில் உள்ள கட்சிகூட தனது வேட்பாளரை நிறுத்த முடியாதே.

இந்திய அரசியல் சட்டத்தின் முதல் பிரிவே இந்தியா மாநிலங்களின் கூட்டாட்சி என்பதுதான். அப்படி இருக்கையில், மாநில சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது, ஆட்சி நிலையாக அமையாவிட்டாலோ, 356, 365 விதிகள்படி நடவடிக்கைகள் வந்தாலோ என்ன நிலை ஏற்படும்? அங்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை அம்மாநிலம் ஜனநாயக ஆட்சியின்றியே இருக்குமா?

செலவு சிக்கனம் என்பதுகூட ஏமாற்றும் வாதம்; நிதி ஆயோக் என்ற அமைப்பு இதுபற்றி மழுப்பிதான் உள்ளது. ஒருபுறம் அரசுக்கு முன்பு ஏராளம் வருவாய் வந்த துறைகளையெல்லாம் ரயில்வே உள்பட, தனியார் முதலாளிகள் - கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு வசதியாக அவர்களிடம் தாரை வார்ப்பது அல்லது விற்று விடுவது என்ற திட்டங்களை அமல்படுத்திட, வேகமாக முயலுகிறது.

மத்திய பாஜக அரசு தங்க முட்டையிடும் நவரத்ன தொழில் கூடங்களைக் கூட தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டே, இப்படி பேசுவது மத்திய அரசின் இரட்டை வேடம், இரட்டை நிலைப்பாடு அல்லவா.

அதிமுக போன்ற மாநிலக் கட்சிகள் இத்திட்டத்தை வரவேற்பது, கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்துகொள்வது போன்ற கேலிக் கூத்தேயாகும். ஜனநாயக மாநில உரிமைகள், மாநிலக் கட்சிகள் இதனைக் கடுமையாக எதிர்த்து கருவிலேயே அழிக்கவேண்டும். இது அரசியல் சட்ட விரோதமும்கூட''. என அதில் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k veeramani says about ore naadu ore therthal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->