'முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து; பாஜ அரசின் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாடு'; மஹாராஷ்டிரா அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்..!
Jawahirullah condemns Maharashtra government for cancelling reservation for Muslims
பாஜ தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 05 சதவீத இடஒதுக்கீட்டை முற்றாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு 'முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மட்டும் ரத்து செய்திருப்பது, பாஜ அரசின் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாடு அரசியலை வெளிச்சம் போடுகிறது' என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
''மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில், சமூகநீதி அடிப்படையில் மராத்தியர்களுக்கு 16 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பாஜ தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 5 சதவீத இடஒதுக்கீட்டை முற்றாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதனை வன்மையாக கண்டிக்கிறேன். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு மும்பை உயர் நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், அதனை முழுமையாகச் செயல்படுத்தத் தவறிய மாநில அரசு, இப்போது அதை முற்றாக நீக்குவது, சட்டத்தையும் நீதித்துறையையும் கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும். ஒரே நேரத்தில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில், மராத்தியர்களுக்கான இடஒதுக்கீட்டை தொடர்ந்து வைத்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மட்டும் ரத்து செய்திருப்பது, பாஜ அரசின் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாடு அரசியலை வெளிச்சம் போடுகிறது.
இடஒதுக்கீடு என்பது ஓர் அரசியல் சலுகை அல்ல; அது வரலாற்று ரீதியாக பின் தள்ளப்பட்ட சமூகங்களைச் சமநிலைக்குக் கொண்டு வரும் சமூகநீதி கருவி. ஆனால் முஸ்லிம் சமூகத்தை கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றிலிருந்து மேலும் தள்ளி வைக்கும் நடவடிக்கைகளையே மகாராஷ்டிரா பாஜ அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த முடிவு முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் மட்டுமல்ல;
சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்புச் சாசன அடிப்படை மதிப்புகளுக்கு விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாகும். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், இந்த அநீதியான, அரசியலமைப்புக்கு விரோதமான முடிவைக் கடுமையாக கண்டிக்கிறேன். முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். '' என்று அந்த அறிக்கையில் எம்.எச்.ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Jawahirullah condemns Maharashtra government for cancelling reservation for Muslims