பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தம்: டிரம்ப் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை: ஜெய்சங்கர் திட்டவட்டம்..!
Jaishankar categorically states that there was no discussion between Trump and Pakistan on the ceasefire
ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து ஆளும் மத்திய அரசு சார்பிலும் எதிர்கட்சிகள் சார்பிலும் லோக்சபாவில் விவாதம் நடந்து வருகிறது.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் உடன் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்றும், ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை, பிரதமர் மோடி அதிபர் டிரம்ப் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் நீண்டகாலமாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருவதைதும், பாகிஸ்தானின் அத்துமீறல் வரலாற்றையும் சர்வதேச நாடுகளுக்கு அம்பலப்படுத்த இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் உண்மையான முகத்தை ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் மூலம் பதிலடி கொடுத்து உலகிற்கு வெளிப்படுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டது என்று கூறியுள்ளார்.

அத்துடன், பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் பாகிஸ்தானின் பங்கை குறித்து உலக நாடுகள் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய வலுவான ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை உலகத் தலைவர்களிடம் எடுத்து கூறியதாகவும், தங்களை பாதுகாக்க உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் எல்லையைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவின் பதில் ஆபரேஷன் சிந்தூருடன் முடிவடையாது என்றும், தங்கள் குடிமக்களையும் நலன்களையும் பாதுகாக்க தேவையான எந்த நடவடிக்கையையும் எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தேசிய பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், பாகிஸ்தானியர்களுக்கான விசா கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், சிந்துார் நடவடிக்கை தொடங்கியது முதல் பல்வேறு அழைப்புகளை தாங்கள் பேச வேண்டியிருந்தது என்றும் தெரிவித்துள்ளார். அதில் அவர் 27 அழைப்புகளில் பேசியதாகவும், பிரதமர் மோடி, 20 அழைப்புகளில் பேசியதாகவும், 35 முதல் 40 ஆதரவு கடிதங்கள் வந்திருந்தன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாம் சிந்துார் நடவடிக்கைக்கு ஆதரவான ஒரு கருத்தாக்கத்தை ராஜதந்திர செயல்பாடுகள் மூலம் உருவாக்க வேண்டியிருந்ததாகவும், ஐ.நா.,வில் இருக்கும் 193 நாடுகளில் 03 நாடுகள் மட்டுமே சிந்துார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இப்போது தான் மாலத்தீவில் இருந்து திரும்பி வந்துள்ளோம். அந்த நாடு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், இந்திய நிறுவனம் ஒன்றை, விமான நிலைய திட்டத்தில் இருந்து வெளியேற்றியது. அதே நாடு, இப்போது இரு விமான நிலையங்கள் அமைக்கும்படி இந்தியாவை வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவுடன் நடந்த உரையாடல்களில், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், சிந்துார் நடவடிக்கையுடன் வர்த்தகம் தொடர்புபடுத்தி பேசப்படவில்லை என்றும், கடந்த ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்புடன் பேசவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ் கடந்த 09-ம் தேதி போன் செய்து பிரதமர் மோடியிடம் பேசியதாகவும், சில மணி நேரங்களில் பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பிரதமர், 'அப்படி தாக்குதல் நடத்தினால், அதற்கு மிகச்சரியான பதிலடி தரப்படும்' என்று திட்டவட்டமாக தெரிவித்ததாகவும், அதன்படி நமது ராணுவம் மிகச்சரியான பதிலடி கொடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நமது தாக்குதல் மூலம் சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளங்களின் படங்களை அனைவரும் பார்த்தனர். இதன் மூலம் நாம் சொன்னதை செய்து காட்டியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
English Summary
Jaishankar categorically states that there was no discussion between Trump and Pakistan on the ceasefire