“பவர் கொடுத்த மக்களுக்கு மின்வெட்டு பரிசா?”.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! தவெக அரசை கடுமையாக விமர்சித்த தமிழிசை!
Is power cuts a gift to the people who gave power Ministers who donot know what department they are in Tamilisai strongly criticized the Tvk government
தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக மின்வெட்டு, நிர்வாக செயல்திறன் மற்றும் கட்சி தாவல் அரசியல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சியினரை பிடித்து சேர்க்கும் பணியிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் கொடுத்த நம்பிக்கையை காப்பாற்றும் ஆட்சியை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி அடுத்தடுத்த பிரச்சனைகளை சமாளித்து நீண்ட காலம் செல்லுமா என்ற கேள்வி எழுகிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மக்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழக மக்கள் தற்போது தெளிவாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்” என்றார்.
தவெக ஆட்சியின் முதல் 15 நாட்களில் நிர்வாகத்தை சீரமைப்பதற்குப் பதிலாக, பிற கட்சிகளில் இருந்து தலைவர்களை இணைக்கும் முயற்சிகளே அதிகமாக நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பவர் கொடுத்துள்ளனர். ஆனால் அதற்குப் பதிலாக மக்களுக்கு மின்வெட்டையே பரிசாக வழங்கி வருகின்றனர். மின்வெட்டுக்கு எதிராக தலைமைச் செயலகத்திலும், முதலமைச்சரின் இல்லம் முன்பும் போராட்டங்கள் நடைபெற்றிருப்பது இந்த ஆட்சியில்தான்” என்று தமிழிசை கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் சில எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதே அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. முதல்வர் விஜய் நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மீம்ஸ் மூலமாக கோரிக்கைகள் வைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது தமிழகம் எந்த திசையில் செல்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது” என்றார்.
அரசியல் கூட்டணிகள் குறித்து பேசிய தமிழிசை, “திருமாவளவன் தற்போது யாருடன் இருக்கிறார் என்பதே அவருக்குத் தெரியாத நிலை உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் பலவும் குழப்பமான சூழ்நிலையில் உள்ளன” என்று விமர்சித்தார்.
ஆதவ் அர்ஜுனா கூறியதாக பேசப்படும் ‘ஊழலற்ற ஆட்சி’ குறித்த கருத்துக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
“தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி நடக்கிறது என்று ஆதவ் அர்ஜுனா கூறுவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சில எம்எல்ஏக்கள் எந்தவித அரசியல் பேரமோ, கொடுக்கல் வாங்கலோ இல்லாமல் கட்சி மாறிவிட்டார்களா? இவை அனைத்தும் மக்களுக்குத் தெரியும். அனைவரும் காதில் பூ வைத்துக்கொண்டு இருக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “ஆதவ் அர்ஜுனா மீது முதலமைச்சருக்கே அதிருப்தி இருப்பதாக தகவல்கள் வருகின்றன” என்றும் கூறினார்.
மத்திய அரசும் தமிழக அரசும் இணக்கமாக செயல்பட்டால் மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கூறிய தமிழிசை, “பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்” என்றார்.
இறுதியாக, “முதல்வர் விஜய் கூறுவது ஒன்று, செய்வது ஒன்று என்ற நிலை இருக்கக் கூடாது. மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும்” என்று தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.
English Summary
Is power cuts a gift to the people who gave power Ministers who donot know what department they are in Tamilisai strongly criticized the Tvk government