அரசியல் என்ட்ரிக்கு தயாரான தனுஷ்? விரைவில் தனுஷ் புதிய கட்சி?தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்!
Is Dhanush gearing up for a political entry Will he launch a new party soon Constituency wise membership drive intensifies
நடிகர் தனுஷ் தனது நற்பணி மன்றத்திற்கு தனி கொடியை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அடுத்தகட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கத்தை தொடங்கி, உறுப்பினர்களை சேர்க்குமாறு அறிவிப்பு வெளியாகியிருப்பது, அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் ஆட்சியைப் பிடித்திருப்பது, அரசியல் களத்தில் கால் பதிக்க விரும்பும் திரை பிரபலங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான் நடிகர் தனுஷின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
சில வாரங்களுக்கு முன்பு தனது நற்பணி மன்றத்திற்கென தனி கொடியை தனுஷ் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தனது பிறந்தநாளையொட்டி பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியையும் நடத்தினார்.
அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் பேசிய தனுஷ், “சும்மா வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு செல்வதற்காக மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும். நலத்திட்ட உதவிகளை செய்ய அனைவரும் கைகோர்க்க வேண்டும்” என அறிவுறுத்தியிருந்தார்.
தனுஷின் இந்தப் பேச்சு ஏற்கனவே அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கட்-அவுட்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டதும் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், அந்த எதிர்பார்ப்புக்கு வலு சேர்க்கும் வகையில் தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கத்தை தொடங்கி, தொகுதி வாரியாக உறுப்பினர்களை சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் ஆர்வமுள்ளவர்கள் கோவை மாவட்ட தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகளை தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுவரை ரசிகர் மன்ற அடிப்படையில் செயல்பட்டு வந்த அமைப்பை, தற்போது சட்டமன்றத் தொகுதி வாரியாக கட்டமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவது அரசியல் நோக்கத்துடன் கூடிய நகர்வா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
குறிப்பாக கொடி அறிமுகம், நலத்திட்டப் பணிகள், தொகுதி வாரியான அமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை என தனுஷின் நடவடிக்கைகள் அடுத்தடுத்து ஒரே திசையில் நகர்வதால், அவரது அரசியல் வருகை குறித்த பேச்சுகள் சமூக வலைதளங்களில் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
கோவை மாவட்டத்தில் அமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அடுத்ததாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இதேபோன்ற தொகுதி வாரியான உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளா அல்லது தனுஷ் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சியா என்பது குறித்து நடிகர் தனுஷ் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆனால், கொடி அறிமுகம் முதல் தற்போது தொகுதி வாரியான உறுப்பினர் சேர்க்கை வரை தனுஷின் அடுத்தடுத்த நகர்வுகள், அவரது அரசியல் என்ட்ரி குறித்த எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டும் உறுதியாகியுள்ளது.
English Summary
Is Dhanush gearing up for a political entry Will he launch a new party soon Constituency wise membership drive intensifies