தொழிற்சாலைகளில் நாளை ஆய்வு !முதல்வர் விஜய் நாளை பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்ன? பிளான் இதுதான்!
Inspections at factories tomorrow What events will Chief Minister Vijay attend Here is the plan
சென்னை: தமிழக முதல்வர் விஜய், தொழில் வளர்ச்சி மற்றும் உற்பத்தி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழிற்சாலைகளை பார்வையிட உள்ளார்.
முதல்வர் விஜய், நிர்வாக மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நேரில் ஆய்வு செய்வதை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், சமீபத்தில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டைகளுக்கு அவர் செல்ல உள்ளார். இந்தப் பகுதிகள் தமிழ்நாட்டின் முக்கிய தொழில் மையங்களாக விளங்கி, ஏராளமான உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பயணத்தின் போது, ஒரகடத்தில் செயல்பட்டு வரும் டைம்லர் வணிக வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் விஜய் பார்வையிட உள்ளார். தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்கி வரும் இந்த நிறுவனம், வணிக வாகன உற்பத்தியில் முக்கிய பங்காற்றி வருகிறது.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் அருகே மாப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் செயிண்ட் கோபைன் கண்ணாடி உற்பத்தி ஆலையிலும் முதல்வர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் முதலீடுகளை ஊக்குவிக்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் விளங்குகிறது.
முதல்வரின் வருகையை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தேவையான பாதுகாப்பு மற்றும் நிர்வாக முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வின் போது தொழில் வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் உற்பத்தி தொடர்பாக அதிகாரிகள் மற்றும் நிறுவன நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Inspections at factories tomorrow What events will Chief Minister Vijay attend Here is the plan