''நாட்டில் மோடி - அமித்ஷா ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்''; தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி கடிதம்..!
India Alliance letter says that electoral democracy is a threat under Modi and Amit Shah rule in the country
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தது.
கடந்த ஜூன் 08 அன்று இண்டியா கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இதில் 21 அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் பங்கேற்றனர். அப்போது, எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து தலைமை நீதிபதிக்கு ஒரு கூட்டுக் கடிதம் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 23 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரின் கையெழுத்துக்களுடன் கூடிய கூட்டுக் கடிதம் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அதில், அவர் ஒரு பதிவையும் இட்டுள்ளார்.
அதில், ''நாட்டில் மோடி-ஷா ஆட்சியில் தேர்தல் ஜனநாயகம் மிக மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அதன் நேர்மையை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல்கள் நேர்மையாக, நியாயமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நமது ஜனநாயகத்தை ஆட்சியாளர்களின் வரம்பு மீறிய நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பது நீதித் துறையின் கடமையாகும் என்றும், அதுவும் குறிப்பாக அரசமைப்பு சட்டக் கட்டமைப்பை அழிப்பதில் குறியாக இருக்கும் ஆட்சியாளர்களிடம் இருந்து அதைப் பாதுகாப்பது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அநீதி மேலோங்காமல் பாதுகாக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் தார்மிக பொறுப்பு என்று சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதைச் செய்யாது 140 கோடி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அத்துடன், நாங்கள் இந்தக் கடிதத்தை வெளிப்படைத்தன்மையை நிறுவும் பொருட்டே பகிரங்கமாக வெளியிடுகிறோம் என்றும், மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்றும் நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்மூலம் நாட்டின் கோடிக்கான வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் கொண்ட நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறோம் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
English Summary
India Alliance letter says that electoral democracy is a threat under Modi and Amit Shah rule in the country