விஜய்யின் பதவியேற்புக்கு உடனடியாக அனுமதி வழங்குக...! - ஆளுநருக்கு சிபிஐ(எம்) விடுத்த எச்சரிக்கை...!
Immediately grant permission Vijay swearing CPIM warning Governor
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி, மாநில அரசியலில் முக்கிய சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இணைந்ததைத் தொடர்ந்து தவெக கூட்டணியின் பலம் 112 ஆக உயர்ந்துள்ளதாலும், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர் ஆதரவு இன்னும் எட்டப்படாததால் அரசியல் பரபரப்பு தொடர்ந்து நிலவி வருகிறது.

இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் நேற்று மாலை ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து, தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென கோரி உரிமை மனுவை வழங்கியிருந்தார். ஆனால், தேவையான பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவு உறுதிப்படுத்தப்படாத காரணத்தால், ஆட்சியமைக்க அழைப்பு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான ஆட்சிப் பெரும்பான்மையை வழங்காத சூழலில், 108 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் முன்னிறுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் மட்டுமே ஆட்சியமைக்க உரிமை கோரியிருப்பதாகவும், வேறு எந்த அணியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உரிமை கோர முன்வராத சூழலில், அவரை ஆட்சியமைக்க அழைப்பது ஜனநாயக நடைமுறைக்கு ஏற்பதாக இருக்கும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆளுநர் பதவியை பயன்படுத்தி அரசியல் நோக்கங்களை முன்னெடுக்க முயலும் நடைமுறையை பாஜக தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாகவே தமிழக ஆளுநர் விஜயை பதவியேற்க அழைக்காமல் காலதாமதம் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை முரணானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி.ஜோசப் விஜயை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Immediately grant permission Vijay swearing CPIM warning Governor