விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை ஏற்க முடியாது...! - வி.சி.க. கொள்கை நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அமைச்சர் வன்னி அரசு...!
Handing over airports private companies unacceptable VCK Minister Vanni government clarifies policy stance
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். அதேவேளை, கொள்கை அடிப்படையில் விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.

அமைச்சர் வன்னி அரசு கூறியதாவது,"பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாற்று நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே சென்னை விமான நிலையத்தின் ஒரு பகுதி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டபோதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.கொள்கை அடிப்படையில் விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்காது.
இருப்பினும், சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரசியல் செய்யவில்லை என்றும், தி.மு.க.தான் அரசியல் செய்வதாகவும் வன்னி அரசு குற்றம்சாட்டினார்.
அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டத்தில் 601 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் 153 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பட்டியலின மாணவர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், தகுதி பெற்ற அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக வன்னி அரசு குற்றம்சாட்டினார்.இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் தன்னை நேரில் சந்தித்து புகார் தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
பட்டியலின மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முந்தைய தி.மு.க. அரசு உரிய முறையில் செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டிய வன்னி அரசு, வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
English Summary
Handing over airports private companies unacceptable VCK Minister Vanni government clarifies policy stance