அதிவேக 100 நாட்கள்: சாதனையா... சவாலா? த.வெ.க. ஆட்சியின் முழுமையான ரிப்போர்ட் இதோ ...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கிய த.வெ.க. அரசு, ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன் ஆகஸ்டு 17-ந் தேதி 100 நாட்களை நிறைவு செய்கிறது. நீண்ட காலமாக இரு பெரும் திராவிட கட்சிகளின் ஆட்சியை மட்டுமே கண்ட தமிழக அரசியலில், புதிய கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த 100 நாட்களில் மக்கள் நலத் திட்டங்கள் முதல் தொழில் முதலீடுகள் வரை பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில் சில விவகாரங்கள் அரசுக்கு சவாலாகவும் மாறியுள்ளன. அந்த வகையில், த.வெ.க. அரசின் முதல் 100 நாள் ஆட்சிப் பயணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்க்கலாம்.

பழைய அரசியல் களத்தை மாற்றிய த.வெ.க.
தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி வந்தன. இந்த நீண்டகால அரசியல் போட்டிக்கு மத்தியில், புதிதாக களமிறங்கிய த.வெ.க. ஆட்சியை பிடித்தது தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது.அரசியலில் குறுகிய கால அனுபவம் கொண்ட த.வெ.க., தேர்தல் வெற்றியை பதிவு செய்து ஆட்சி அமைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஜோசப் விஜய் தமிழக முதல்-அமைச்சராக மே 10-ந் தேதி பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் அன்றைய தினமே பொறுப்பேற்றனர்.அதன்பிறகு மே 21-ந் தேதி நடைபெற்ற 2-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், மே 22-ந் தேதி நடைபெற்ற 3-வது விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். தொடர்ந்து, அமைச்சர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன.

தொடக்க நாளிலேயே அதிரடி அறிவிப்புகள்
பதவியேற்ற முதல் நாளிலேயே ஜோசப் விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு, தனது அரசின் தொடக்க நடவடிக்கைகளுக்கு அடித்தளம் அமைத்தார்.2 மாதங்களில் 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்றும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

717 மதுக்கடைகளுக்கு மூடுவிழா
ஆட்சியின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.அதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதன் மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்ந்தது.

விவசாயிகளுக்கு நிவாரணம்
மாநிலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைத்து, தரமான உணவுகளை சுவையுடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.இதன் தொடர்ச்சியாக, குறு விவசாயிகள் பெற்றிருந்த ரூ.50 ஆயிரம் வரையிலான பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. விவசாயிகளின் சுமையை குறைக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.

டெல்லி பயணம்... பிரதமருடன் சந்திப்பு
மே 27-ந் தேதி டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.அப்போது, மேகதாது அணை விவகாரம், தமிழக மீனவர்களின் பிரச்சினை உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கவனம்
ஜூன் 9-ந் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.அதன்பின்னர், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட்டில் குவிந்த அறிவிப்புகள்
கடந்த 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.திருமணமாகும் பெண்களுக்கு திருமண நாளில் ‘அண்ணனின் சீர்’ திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும், பட்டுப்புடவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குடிசை வீடுகளுக்கு மாற்றாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.மேலும், பிளஸ்-1 மாணவர்களுக்கு தலைக்கவசம் மற்றும் குடிநீர் பாட்டிலுடன் கூடிய நவீன மிதிவண்டிகள் வழங்கப்படும் என்றும், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகின.

தேர்தல் வாக்குறுதிகளுக்கு எவ்வளவு இடம்?
பட்ஜெட்டில் இடம்பெற்ற திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 125 வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.இதன் மூலம் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஆட்சியின் திட்டங்களுடன் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு தெரிவித்தது.

முதலீடுகளை ஈர்ப்பதில் புதிய வேகம்
மக்கள் நல அறிவிப்புகளுக்கு மத்தியில், தொழில் துறையிலும் அரசு கவனம் செலுத்தியது. கடந்த 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 13-ந் தேதி நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் ரூ.67 ஆயிரத்து 452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதுடன், 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.முதலீடுகள் ஒருசில நகரங்களில் மட்டும் குவியாமல், 23 மாவட்டங்களுக்கு பரவலாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக தொழில் நிறுவனம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

அரசை சுற்றி எழும் விமர்சனங்கள்
ஒருபுறம் தொழில் முதலீடுகள், மக்கள் நலத்திட்டங்கள் என அரசு தனது செயல்பாடுகளை முன்னிறுத்தி வரும் நிலையில், மறுபுறம் சில முக்கிய பிரச்சினைகள் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மின்தடை, குப்பைகள் முறையாக அகற்றப்படாதது உள்ளிட்ட விவகாரங்கள் அரசின் மீது முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளாக உள்ளன.

எதிரில் இரண்டு எதிர்க்கட்சிகள்
கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில் இருந்தால் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாகவும், அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தால் தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் இருந்தது.ஆனால், தற்போதைய அரசியல் சூழல் வித்தியாசமானதாக உள்ளது. த.வெ.க. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு முக்கிய கட்சிகளும் எதிர்க்கட்சிகளாக களத்தில் உள்ளன.இதனால், சட்டசபையில் த.வெ.க. அமைச்சர்கள் ஒரே நேரத்தில் இரு தரப்பினரின் கேள்விகள், விமர்சனங்கள் மற்றும் அரசியல் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

100 நாட்களில் வெற்றியா? சவாலா?
சட்டசபை அனுபவத்தில் நீண்ட பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில், புதிய ஆட்சியாக த.வெ.க. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும், அந்த சவால்களை ஆளும் தரப்பு எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.மொத்தத்தில், த.வெ.க. அரசின் முதல் 100 நாட்கள் அறிவிப்புகள் நிறைந்த தொடக்க காலமாக அமைந்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள், விவசாயிகளுக்கான நிவாரணம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, தொழில் முதலீடுகள் என பல்வேறு தளங்களில் அரசு தனது நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளது.அதே நேரத்தில், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளில் எழும் விமர்சனங்கள் அரசுக்கு தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, முதல் 100 நாட்கள் என்பது அரசின் முழுமையான செயல்பாட்டை தீர்மானிக்கும் காலகட்டமாக இல்லாவிட்டாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆட்சி எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதற்கான தொடக்க அறிகுறிகளை வெளிப்படுத்திய காலமாகவே பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fastest 100 day achievement challenge Here complete report tvk regime


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->