ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! மருத்துவர்களுக்கு திமுக அரசு செய்வது சமூக நீதியா? அது ஈகத்தை அவமதிக்கும் செயல்...! - சீமான் - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான்,"முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நியமனம் வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீமான்:

இதுதொடர்பாக அவர் அறிக்கை ௦ன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,"உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியைக்கூடச் செய்ய மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

கொரோனா பெருந்தொற்றுக் காலம் முதல் தற்போதைய டெங்கு தொற்றுக் காலம் வரை தம் உயிரைப் பொருட்படுத்தாது, மக்கள் உயிர் காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றி வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க கடின உழைப்பே முதன்மையான காரணமாகும். தமிழ்நாட்டின் 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை-எளிய தமிழக மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர்.

ஆடம்பரத் திட்டங்களுக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கும் திமுக அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளைக் கூட இன்றுவரை நிறைவேற்றாமல் அலட்சியம் செய்வது கொடுங்கோன்மையாகும்.அதுமட்டுமன்றி, கொரோனோ பெருந்தொற்றுப் பணியின்போது உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிறிதும் மனச்சான்று இன்றி திமுக அரசு ஏற்கமறுப்பது அதைவிடவும் பெருங்கொடுமையாகும்.

கடந்த 22.11.2020 அன்று மருத்துவப்பணியில் இருக்கும்போதே கொரோனா தொற்றால் மரணமடைந்த திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் விவேகானந்தன் அவர்கள் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவருடைய மனைவி திவ்யாவிற்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி கேட்டுப் பலமுறை முறையிட்டும் திமுக அரசு அவரது கோரிக்கைக்கு இன்றுவரை செவிமடுக்கவில்லை.

அரசு மருத்துவர் விவேகானந்தன் மரணத்திற்குப் பிறகு அவரது ஏழைக் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அவரது மனைவிக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்று முதலில் அறிக்கை வெளியிட்டது வேறு யாருமல்ல; அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய முதல்வருமான ஐயா ஸ்டாலின் அவர்கள்தான்! தான் முன்வைத்த கோரிக்கையை, தன் கையில் அதிகாரம் கிடைத்த பிறகு நிறைவேற்ற மறுப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.

கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர் பணியின் போது ஏற்பட்ட கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவரது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் சமூக நீதியா?! உயிர்களைக் காக்க நாள்தோறும் போராடிவரும் மருத்துவர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க ஆண்டுக்கணக்கில் போராடிவரும் துயரம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலை நீடிப்பது மருத்துவர்களின் ஈகத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை உணர்ந்து, திமுக அரசு, மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பாட்டை நன்கு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் உயிர் காக்க தன் உயிரைப் பணயம் வைத்த அரசு மருத்துவரின் குடும்பத்தை ஒரு கருணை வேலைக்காகக் காத்திருக்கச் செய்து அலைகழிப்பது என்பது, மருத்துவர்களின் ஈகத்தையும், அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துவதாகும். திமுக அரசின் இத்துரோகச்செயல், இனிவரும் இளந்தலைமுறை மருத்துவர்களிடத்தில் சேவைபுரிய வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடும் கொடுஞ்சூழலை ஏற்படுத்திவிடும்.

ஆகவே, கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும், முறைப்படி வழங்க வேண்டிய உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி எதிர்வரும் 11.06.2025 அன்று சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அரசு மருத்துவர் பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெருபொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Even though regimes have changed scenes have not changed Is the DMK government doing social justice to doctors act insulting equality Seeman


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->