தூரம் பிரித்தாலும் தமிழ் இணைக்கிறது...! அயலக தமிழர் தினத்தில் உதயநிதி உரை...!
Even though distance separates us Tamil unites us Udhayanidhi speech Overseas Tamils Day
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற ‘அயலக தமிழர் தினம்’ கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தார். உணவு, கலாச்சாரம், வணிகம், கைவினைப் பொருட்கள் மற்றும் தமிழ் இலக்கியத்தை மையமாகக் கொண்டு 252 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தூரம் அதிகமானாலும் தமிழ் உறவு வலுப்பெறுகிறது. உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டின் மீது கொண்ட பாசத்தோடு இங்கு ஒன்று கூடுவது பெரும் மகிழ்ச்சி” என்றார்.பொங்கல் பண்டிகை என்பது தமிழ் பண்பாட்டின் அடையாளம் என்றும், அந்தப் பொங்கல் காலத்தில் அயலக தமிழர்களை சந்திப்பது குடும்பத்தினரை சந்திப்பதைப் போல உணர்வதாகவும் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு அயலக தமிழர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருவதாகக் கூறிய அவர், “தமிழால் இணைவோம்… தரணியில் உயர்வோம்…” என்ற இந்த ஆண்டின் தலைப்பு மிகப் பொருத்தமானது என்றார்.
தமிழ் மொழி எந்த வேறுபாடும் பாராமல் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது என்றும், தமிழ் அடையாளத்திற்கு முன் வேறு எந்த அடையாளமும் இல்லை என்றும் வலியுறுத்தினார்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க, முதன்முறையாக அயலக தமிழர் நல வாரியம் தொடங்கப்பட்டதாகவும், இன்று அதில் 32 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். போர் சூழலில் சிக்கிய தமிழர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதையும் நினைவூட்டினார்.
தமிழர்களின் முயற்சியால் தமிழ்நாடு இன்று நம்பர்–1 பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக உயர்ந்துள்ளதாகக் கூறிய அவர், அந்த சாதனையில் அயலக தமிழர்களின் பங்கு மிகப்பெரியது என்றார்.முதலமைச்சர் அறிவித்த ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் மூலம், அயலக தமிழர்களும் தங்களது கனவுகள், கோரிக்கைகளை நல வாரியத்தின் மூலம் தெரிவிக்கலாம் என்றும் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ. அன்பரசன், ஆவடி நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Even though distance separates us Tamil unites us Udhayanidhi speech Overseas Tamils Day