அரசு மருத்துவமனையில்கூட பாதுகாப்பில்லை ...! - திமுக ஆட்சியை கடுமையாக சாடிய அண்ணாமலை
Even government hospitals there no safety Annamalai severely criticized DMK government
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,"சென்னையின் இதயப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய அரசு மருத்துவமனையான கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆதி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது, திமுக ஆட்சியில் காவல்துறை எவ்வளவு மோசமாக செயலிழந்துள்ளது என்பதற்கான வெளிப்படை சான்றாகும்.
தலைநகரின் அரசு மருத்துவமனை கூட பாதுகாப்பற்றதாக மாறியிருப்பது, காவல் துறையின் தோல்வி மட்டுமல்ல; அது திமுக அரசின் நிர்வாகச் சீரழிவின் உச்சக்கட்டம்.அரசு மருத்துவமனை வளாகத்தில் கொலை நடக்கிறது என்பதே, மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் கைமீறி போய்விட்டதை உணர்த்துகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களை விரல்களில் எண்ணிவிடலாம் என்ற அளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சியினரை மிரட்டவும், பழிவாங்கவும் காவல்துறையை பயன்படுத்தி, தமிழக காவல்துறையை அரசியல் கருவியாக மாற்றியிருப்பதே திமுக அரசின் ஒரே ‘சாதனை’ என அவர் கடுமையாக சாடினார்.
முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என எந்த தரப்பினரும் இன்று திமுக ஆட்சியில் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. அரசு மருத்துவமனையில்கூட பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அரசு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை எவ்வாறு காக்கப் போகிறது? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
மேலும், “யாரோ துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுப்பதை மேடையில் வாசிப்பதே திமுக அரசின் சாதனையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். மாநில அரசின் முதன்மை கடமை ஆன சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கத் தெரியாமல், பொதுமேடைகளில் ஏறி பொய்களைப் பேசுவது அவமானகரமானதல்லவா?” என அவர் கடும் சொற்களில் விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Even government hospitals there no safety Annamalai severely criticized DMK government