ஜனநாயகன் சென்சார் தாமதம் – “மத்திய அரசை குறை சொல்வது நியாயமில்லை” : குஷ்பு விளக்கம்
Janyayan censor delay It is not fair to blame the central government Khushbu explains
எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம், சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக வெளியீடு தாமதமானது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விரிவாக கருத்து தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டுவது முறையல்ல என்றும், தயாரிப்பாளர்களே விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குஷ்பு பேசுகையில், “ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு அனைவரும் மத்திய அரசையே காரணமாக காட்டுகிறார்கள். அப்படி என்றால், பராசக்தி படத்திற்கே முதலில் தடை வந்திருக்க வேண்டும். அந்தப் படத்தை தயாரித்தது ரெட் ஜெயண்ட். அவர்கள் திமுகவை எதிரியாகப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இப்படி எல்லாவற்றுக்கும் மத்திய அரசையே காரணம் சொல்லுவது சரியான அணுகுமுறை அல்ல” எனக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “எதற்கெடுத்தாலும் மத்திய அரசுதான் காரணம் என சொல்வது, யோசனையில்லாத பேச்சு. குழந்தை அழுதாலும் மத்திய அரசுதான் காரணம் என்று சொல்வோரை என்ன சொல்ல?” என கேள்வி எழுப்பிய அவர், “நான் ஒரு நடிகை மட்டுமல்ல, ஒரு தயாரிப்பாளரும் கூட. தணிக்கை குழுவுக்கு தனியான விதிமுறைகள் உள்ளன. சென்சார் சான்றிதழ் கிடைத்த பிறகே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும். இதுதான் விதி. ஆனால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இதை பின்பற்றுவதில்லை” என்றார்.
தொடர்ந்து, “இந்த தவறுக்கு நடிகரை குற்றம் சொல்ல முடியாது. இது முழுக்க முழுக்க தயாரிப்பாளரின் பொறுப்பு. பண்டிகை காலங்களில் அரசு விடுமுறை இருக்கும் போது, 24 மணி நேரமும் அதிகாரிகள் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல” என்று குஷ்பு தெரிவித்தார்.
ஜனநாயகன் படம் வெளியாகாதது குறித்து ரசிகையாக வருத்தம் இருப்பதாக கூறிய குஷ்பு, “என் மகளே விஜய் ரசிகை. அந்த படம் வெளியாகாதது எனக்கும் வருத்தம் தான். ஆனால் ரூல்ஸ் ஆர் ரூல்ஸ். விதிகளை முதலில் பின்பற்றினால் இந்த மாதிரியான பிரச்சனைகள் வராது” என்று தனது பேச்சை முடித்தார்.
இந்த கருத்துகள் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Janyayan censor delay It is not fair to blame the central government Khushbu explains