அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகள் எதிரொலி: இனி அமெரிக்காவை நம்ப முடியாது.. தங்கத்தை வைத்து அடித்து ஆடும் மோடி.. திரும்பி வந்த பொக்கிஷம்
Echoes of America aggressive actions America can no longer be trusted Modi plays with gold The treasure has returned
அமெரிக்கா சர்வதேச விதிகளை மீறி செயல்பட்டு வரும் சூழலில், உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மேலும் நிலையற்றதாக மாறி வருகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகள் மீது வர்த்தகப் போர் நடத்துவது, அந்நிய நாடுகளில் திடீர் தாக்குதல்கள் மேற்கொள்வது முதல் சமீபத்தில் வெனிசுலா வரை நேரடியாக தலையீடு செய்வது வரை அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகள் பல நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பின்னணியில், இந்தியா தனது தங்க கையிருப்பு பாதுகாப்பு தொடர்பாக முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), கடந்த மார்ச் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில், சுமார் 80 டன் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் நேரடியாக வைத்திருக்கும் தங்க அளவு 600 டன்னாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, டிசம்பர் 2025 இறுதி நிலவரத்தில் இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 880.8 டன்னாக இருந்தது. இதில் 290.3 டன் தங்கம் இங்கிலாந்து வங்கி மற்றும் பன்னாட்டு தீர்வுகளுக்கான வங்கி (BIS) வசம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 14 டன் தங்கம் தங்க வைப்புத் திட்டங்களில் உள்ளது.
கடந்த 18 மாதங்களில், இந்தியா உள்நாட்டில் வைத்திருக்கும் தங்கத்தின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்திய வரலாற்றில், இவ்வளவு பெரிய அளவில் தங்கத்தை வேகமாக வெளிநாடுகளில் இருந்து திரும்பப் பெற்றது இதுவே முதல்முறையாகும். குறிப்பாக, அமெரிக்க கருவூலங்களில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு தங்கத்தை இந்தியா மீட்டுள்ளது என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2023 தொடக்கத்தில் இருந்தே, உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் உள்ள தங்கத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை ஆரம்பித்தது.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் வெளிநாட்டு நாணய இருப்புகள் முடக்கப்பட்டதும், தாலிபான்கள் ஆட்சி வந்தபின் ஆப்கானிஸ்தானின் இருப்புகள் மேற்கத்திய நாடுகளால் கைப்பற்றப்பட்டதும், பல நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைந்தன. இதன் காரணமாக, வெளிநாடுகளில் தங்கத்தை வைத்திருப்பது முழுமையாக பாதுகாப்பானது அல்ல என்ற உணர்வு வலுப்பெற்றுள்ளது.
இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்படும் அதிகமான ஏற்றத்தாழ்வுகளால், இந்திய ரிசர்வ் வங்கி தற்காலிகமாக புதிய தங்க கொள்முதலை நிறுத்தியுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதக் குறைப்பால் தற்போது தங்க விலை உயர்ந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் விலை குறையும் போது வாங்குவது சிறந்த முடிவு என RBI கருதுகிறது. 2024ஆம் ஆண்டில் மட்டும், உலகளாவிய மத்திய வங்கிகள் சுமார் 84 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கத்தை வாங்கியுள்ளன. டாலர் மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் மதிப்பில் நிலவும் அசாதாரண மாற்றங்கள் காரணமாக, தங்கம் மத்திய வங்கிகளுக்கு முக்கிய முதலீடாக மாறியுள்ளது.
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் ஜூலை 2025 அறிக்கையின்படி, உலக தங்கச் சந்தையில் இந்தியாவின் பங்கு 15% ஆக உள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 23 டிரில்லியன் அமெரிக்க டாலராக கணக்கிடப்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் 65% நகைகளாக மாற்றப்பட்டுள்ளன. உலக பொருளாதாரம் மோசமடைந்து வரும் சூழலில், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளதால், பல நாடுகள் தங்கத்தை குவித்து வருகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் தங்க கையிருப்பு 35% உயர்ந்துள்ளது. 2020 நிதியாண்டில் 653 டன்னாக இருந்த தங்க இருப்பு, மார்ச் 2025இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், உலக தங்க கையிருப்பு தரவரிசையில் இந்தியா ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2015ஆம் ஆண்டு இந்தியா பத்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக தங்க கவுன்சிலின் தகவல்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு தற்போது 11.35% ஆக உள்ளது. இது 2021இல் 6.86% மட்டுமே இருந்தது.
இந்த வேகமான வளர்ச்சி, உலக பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் நிலையில், சீனாவிற்கும் இது ஒரு சவாலாக மாறக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
English Summary
Echoes of America aggressive actions America can no longer be trusted Modi plays with gold The treasure has returned