பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: தமிழக அரசியல் சூழல் குறித்து நேரில் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி..!
Edappadi Palaniswami to meet Prime Minister Modi in person in Chennai today
பிரதமர் மோடி இன்று ஒருநாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்னை வருகிறார். இந்த பயணத்தில் முக்கியமாக சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 04-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக நிறைவடைந்துள்ள பூந்தமல்லி- வடபழனி வரையிலான 14.64 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் தமிழக முதல்வர் விஜய்யுடன் இணைந்து திறந்து வைப்பதோடு, அவருடன் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார்.
அத்துடன், தமிழகத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமான நிலையத்தில் சந்தித்து பேசவுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி நீடித்து வரும் நிலையில், கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் விமான நிலையம் சென்று பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கவுள்ளார். பின்னர் விமான நிலையத்தில் தனியாக பிரதமரை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பில், தமிழக அரசியல் சூழல், நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள், தவெகவின் தொடர் வெற்றி, திமுக, அதிமுகவின் தொடர் தோல்விகள், அதிமுகவில் தனி அணியாக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பு செயல்பட்டு வருவதை முடிவுக்கு கொண்டுவருவது போன்ற விவகாரங்கள் குறித்து பேசவுள்ளதாகவும், இந்த இடைத்தேர்தலில் தவெகவுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து சி.வி.சண்முகம் தலைமையில் 21 எம்எல்ஏக்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Edappadi Palaniswami to meet Prime Minister Modi in person in Chennai today