திமுகவை தேர்தலில் திண்டாடவைக்க எடப்பாடியின் பக்கா பிளான்.! திணரும் துரைமுருகன்.! - Seithipunal
Seithipunal


திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தேர்தல் பணிகளை செய்ய விடாமல் திமுகவை தடுக்கும் நோக்கத்துடன் கொரோனா கட்டுப்பாடுகள் என்ற திரைமறைவு கட்டுப்பாடுகளை முதல்வர் தொடர்கிறார் என்று கூறியுள்ளார். 

இது குறித்து அவர், "தமிழகம் மீட்போம்’ என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரைப் பயணத்தை திமுக இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இதுதொடர்பான முறையான அறிவிப்பை கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிவிப்பு செய்துள்ளார். இதன் தொடக்கமாக கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது பரப்புரையைத் தொடங்கி உள்ளார். பரப்புரைப் பயணத்தை, தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்கு வித்திட்ட தமிழ் ஒளிவிளக்காம் கருணாநிதி பிறந்த திருக்குவளை வீட்டில் இருந்து கால் பதித்து அங்கிருந்து தொடங்கினார்.

பயணம் தொடங்கிய இடத்திலும், வழியெங்கும் குவிந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிமுக அரசு, காவல்துறையின் துணையோடு இந்தப் பயணத்தை நசுக்க முடிவெடுத்துள்ளது. உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடக்க இருந்த முதற்கட்ட பயணத்தை தொடங்கிய இடத்திலேயே மறித்த அதிமுக அரசின் அராஜக போக்குக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நித்தமும் ஒரு மாவட்டத்துக்குப் போய், அரசு நிகழ்ச்சி, ஆய்வு என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளை தரம் தாழ்ந்து விமர்சித்து தனது அரசியல் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பேட்டிகள் கொடுப்பது, கலந்தாலோசனைகள் செய்வது என்பதை அவரோ அமைச்சர்களோ அவர்களது கட்சியோ நிறுத்தவில்லை. ஆனால், திமுக நடத்தும் கூட்டங்களாக இருந்தால் அதற்கு அனுமதி மறுப்பதை வழக்கமாக வைத்துள்ளது அரசு. ஆளுநர் மாளிகை நோக்கிய மகளிர் பேரணியைத் தடுத்து, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோரைக் கைது செய்தது இந்த அரசு. ஆனால், அமைச்சர்களுக்கோ, ஆளும்கட்சிக்கோ எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

இதை வைத்துப் பார்க்கும்போது, திமுகவின் தேர்தல் பணிகளைத் தடுக்கும் நோக்கத்துடன்தான் கொரோனா கட்டுப்பாட்டுகள் என்ற திரைமறைவுக் கட்டுப்பாடுகளை எடப்பாடி பழனிச்சாமி தொடர்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது. இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி கைது செய்யப்பட்டாலும், இந்த பரப்புரை பயணம் நிற்காது. அவர் தனது பயணத்தை தொடர்வார். திட்டமிட்டபடி கழக முன்னணியினர் அனைவரும் தங்களது பயணங்களைத் தொடர்வார்கள். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலமாக திமுகவின் செயல்பாட்டை தடுத்துவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுமானால் அது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே மக்கள் மன்றத்தில் தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன்.

ஜனநாயக உரிமை, கருத்துரிமை ஆகியவற்றைக் கருத்தில் வைத்து பரப்புரைப் பயணத்துக்கான முறையான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முறையான அனுமதி தர அரசும், காவல்துறையும் மறுக்கப்படுமானால் தடையை மீறி கழகத்தின் பிரச்சாரப் பயணம் தொடரும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்."என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Duraimurugan harshly speech about EPs plan


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->