திராவிட மாடல் அரசா...? தொழிலாளர்களை மிரட்டும் ஆட்சியா...? - திமுக அரசை சீமான் சாடல் - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு ரப்பர் கழகத்தின் நிலம் மற்றும் தொழிலாளர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,"கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தின் கீரிப்பாறை பிரிவில் உள்ள சுமார் 18 ஹெக்டேர் பரப்பளவிலான ரப்பர் தோட்டத்தை வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்குள்ள பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைத்திருப்பது, அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் மிக மோசமான முடிவாகும்.

இது தொழிலாளர்களுக்கு எதிரான அரசின் தொழிலாளர் விரோத போக்கை வெளிப்படையாக காட்டுகிறது.1964-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில், வேலைவாய்ப்புகள் குறைவாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர கிராம மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கில் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மருதம்பாறை உள்ளிட்ட 9 கோட்டங்களில் அரசு ரப்பர் தோட்டக் கழகம் தொடங்கப்பட்டது.

சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவில், 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நம்பிக்கையுடன் வேலைக்கு அமர்த்தி சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த கழகம், இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கால நிர்வாக அலட்சியத்தால் இன்று சீரழிவின் விளிம்பில் நிற்கிறது.ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறை ஊதியம் போன்ற அடிப்படை உரிமைகளே வழங்கப்படாத நிலையில், தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

தினக்கூலியாக பணியாற்றும் சுமார் 900 தொழிலாளர்களை, “வேலை இல்லை” என கூறி வாரத்தில் பல நாட்கள் திருப்பி அனுப்பும் கொடூர நடைமுறைகளும் தொடர்கின்றன. ரப்பர் தோட்டங்கள் மூலம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும் நிலையில், கூலி உயர்வு வழங்க மறுப்பது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும்.

இந்நிலையில், கீரிப்பாறை கோட்டத்தில் உள்ள 18 ஹெக்டேர் ரப்பர் தோட்டத்தை வனத்துறைக்குக் கையளிக்கும் அரசின் முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 110 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நீக்க ஆணை பிறப்பித்திருப்பது, தொழிலாளர் விரோதத்தின் உச்சமாகும். இந்த அநீதிக்கு எதிராக, நாம் தமிழர் கட்சி தொழிலாளர்களுடன் தோள் தோளாக போராட்டக் களத்தில் நிற்கிறது.

ரப்பர் கழக அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றத்தையும் தராத நிலையில், தொழிலாளர்களுடன் இணைந்து அரசு ரப்பர் கழக அலுவலகத்தின் முன் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். ஆனால், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் திமுக அரசு, போராடும் தொழிலாளர்களை மிரட்டி அவர்களின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முயல்வது, எதேச்சதிகாரத்தின் வெளிப்பாடாகும்.

சமத்துவம், சமூக நீதி என்று பேசும் திமுக அரசு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமையை காக்கும் முறை இதுதானா? இதற்குத்தான் ‘திராவிட மாடல் அரசு’ என்று பெயரா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.எனவே, கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத் தோட்டத்தை வனத்துறைக்குக் கையளிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். ரப்பர் கழகத் தொழிலாளர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும் வரை, நாம் தமிழர் கட்சி முழு ஆதரவுடன் அவர்களுடன் போராடும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dravidian model government regime that threatens workers Seeman criticizes DMK government


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->