மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கைக்கான  நுழைவுத்தேர்வில்  எடுக்க வேண்டிய  தகுதி மதிப்பெண்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% சலுகை வழங்குவதற்காக  தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும்  விளையாட்டுப் பல்கலைக்கழகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் இயற்கைக்கு முரணாகவும், சமூகநீதிக்கும் எதிராகவும் அமைந்திருக்கின்றன.  

இட ஒதுக்கீட்டுக்கான விதிகளை மாநிலங்களின் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படுத்த வேண்டும் என்பதைக் கூட  அறியாமல் பல்கலைக்கழகம் கட்டுப்பாடு விதிப்பது கண்டிக்கத்தக்கது.

யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் 27.08.2018-ஆம் நாளிட்ட 325 எண் கொண்ட  அறிவிக்கையின்படி, முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கைக்கான  நுழைவுத்தேர்வில்  வெற்றி பெற 50%  மதிப்பெண்களுக்கு மாற்றாக, பட்டியலினத்தவர்/பழங்குடியினர்/ பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  45%  மதிப்பெண் எடுத்தால் போதுமானது. 

இந்த அறிவிக்கையின்படி மாணவர் சேர்க்கையில் 5% மதிப்பெண் சலுகை வழங்க ஒப்புக்கொண்டுள்ள தமிழ்நாட்டு விளையாட்டுப் பல்கலைக்கழகம்,  அந்த சலுகை பெற வேண்டுமானால் தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர்கள் ஆகியோர் அவர்களின் நிரந்தர சாதிச்சான்றிதழைக் காட்டினால் போதாது என்றும் ஓபிசி சான்றிதழைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறது. இது சமூக அநீதி.

யு.ஜி.சி அறிவிக்கையில் இடம்பெற்றுள்ள ஓபிசி என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவு மத்திய அரசின் கல்வி/வேலைவாய்ப்புக்கு மட்டுமே பொருந்தக் கூடியது. தமிழ்நாடு அரசின் கல்வி/வேலைவாய்ப்புகளில் ஓபிசி என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவு இல்லை; பி.சி, பி.சி(முஸ்லீம்), எம்.பி.சி, சீர்மரபினர் ஆகியவை தான் உள்ளன; இவை அனைத்தும் ஓபிசி பிரிவுக்கு இணையானவை. 

இதை உணராமல் தமிழக அரசுக்கு சொந்தமான விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் சலுகை பெற ஓபிசி சான்றிதழ் கோரப்படுவதை  தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. 

ஓபிசிக்கு இணையான  பி.சி, பி.சி(முஸ்லீம்), எம்.பி.சி, சீர்மரபினர் ஆகிய பிரிவினருக்கான சாதிச் சான்றிதழை தாக்கல் செய்வோருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்.

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் நிலை இப்படி என்றால்,  தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான பிற பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவற்றில், முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில், யு.ஜி.சி அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு  5% மதிப்பெண் சலுகையே வழங்கப்படுவதில்லை.  

இது சமூகநீதியை முற்றிலும் மறுப்பதாகும். இந்த நிலையை மாற்றி முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கும்படி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக அரசு  ஆணையிட வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About TN Reservation issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->