மத்திய அரசு பொறுமை காப்பது தேசப்பாதுகாப்புக்கு ஆபத்து - எச்சரிக்கும் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal



இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சீன இராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் முகாமிட்டிருப்பதாகவும், அங்கிருந்து  நவீன கருவிகளின் உதவியுடன் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தீவிரமாக உளவு பார்த்து வருவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொறுமை காப்பது தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "இலங்கையின் கடலோரப் பகுதிகளில் கடல் அட்டை சாகுபடி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்வதாகக் கூறி, இலங்கையின் வடக்கு மாநிலத்தில் உள்ள முல்லைத்தீவு, பருத்தித் தீவு, அனலைத் தீவு, மீசாலை உள்ளிட்ட பகுதிகளில் சீன மக்கள் அதிக எண்ணிக்கையில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் சீன இராணுவ வீரர்களின் நடமாட்டமும் அந்தப் பகுதிகளில் அதிகரித்திருக்கிறது. அத்துடன்  செயற்கைக் கோள்கள், டிரோன்கள் மற்றும் அதிநவீன கருவிகளின் உதவியுடன் சீனப் படையினர் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை உளவு பார்க்கத் தொடங்கியுள்ளனர். மேலும், சீனர்கள்  பலர் இலங்கையிலிருந்து அந்த நாட்டு அரசியல் கட்சி ஒன்றின் உதவியுடன் தமிழ்நாட்டிற்குள் ரகசியமாக நுழைந்துள்ளனர்.

இலங்கையில் சீனப் படைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும், இந்தியாவுக்குள் சீனர்கள்  ஊடுருவியிருப்பதையும் தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவும், கடலோர பாதுகாப்புக் குழுவும் உறுதி செய்திருக்கின்றன. சீனப் படைகளின் தொடர் உளவு, சீனர்களின் ஊடுருவல் ஆகியவற்றின்  நோக்கம் என்ன? என்பது அனைவரும் அறிந்தது தான். வடக்கு எல்லையில் லடாக் வழியாக ஊடுருவி தொல்லை கொடுத்து வரும் சீனா, தெற்கில் இலங்கை வழியாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை கண்காணிப்புக்குள் கொண்டு வந்து தொல்லை கொடுக்க வேண்டும்; இந்த தொல்லைகளை சமாளிப்பதில் இந்தியாவை முடக்கி வைக்க வேண்டும்; இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை  நிறுத்த வேண்டும் என்பது தான் சீனாவின் நோக்கம் ஆகும். இதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே சீன இராணுவம், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தையொட்டிய நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய 3 தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு இலங்கை வழங்கியது. மின்சாரம் தயாரிக்கும் போர்வையில் அங்கிருந்து இந்தியாவை உளவு பார்ப்பது தான் சீனாவின் திட்டம் ஆகும். ஒரு கட்டத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு பணிந்த இலங்கை, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து தான் தமிழீழப் பகுதியில் காலூன்றி, அங்கிருந்து  தமிழ்நாட்டை கண்காணிக்கும் நோக்குடன் கடந்த ஆண்டு திசம்பர் மாதம் இலங்கைக்கான சீன தூதர் கி சென்ஹாங், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தமிழர்களுக்கு உதவிகளை வழங்கினார். தமிழகத்தையொட்டிய இராமர் பாலத்தின் மூன்றாவது திட்டு வரை வந்த அவர், டிரோன்கள் மூலமாகவும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளை உளவு பார்த்து விட்டு கொழும்புக்கு திரும்பிச் சென்றார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் உளவுக் கப்பல் அம்பான்தோட்டை துறைமுகத்தில் பல நாட்கள் முகாமிட்டு இந்தியாவை உளவு பார்த்துச் சென்றது. அடுத்தக்கட்டமாக, கடல் அட்டை சாகுபடி என்ற பெயரில் இந்தியாவை சீன உளவு பார்க்கத் தொடங்கி  உள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும். இதை மத்திய அரசு நன்றாக அறியும். ஆனாலும் இந்த விஷயத்தில் அமைதி காப்பது ஏன்? எனத் தெரியவில்லை.

இந்தியாவுக்கு எதிரான சீனாவின் சதித்திட்டங்களுக்கு இலங்கை அரசு தெரிந்தே உதவி செய்கிறது. ஒருபுறம் இந்தியாவிடம் உதவிகளை வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசு, இன்னொருபுறம் அதன் விசுவாசத்தை சீனாவுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கையை தளமாக மாற்றிக் கொண்டு, தெற்கிலிருந்து இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைக்கும் சீனாவின் திட்டம்  வெற்றி பெற்றால், அது இந்திய இறையாண்மைக்கு சரி செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தி விடும்.

எனவே, இலங்கை வழியாக சீனாவிடமிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிப்பது தான்  இந்தியாவின் முதன்மை பணியாக இருக்க வேண்டும். அதற்காக தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண்ணை சீனா பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று இலங்கை அரசை  இந்தியா எச்சரிக்க வேண்டும். அதன்பிறகும் இலங்கை அரசு திருந்தா விட்டால்,  இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு திருத்தி அமைக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Sri Lanka China Issue 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->