எங்களுக்கா தகுதியில்ல., விமர்சனங்களை அடித்து நொறுக்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்! சாதித்துவிட்ட பெருமிதத்தில் டாக்டர் ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அரசு பள்ளி மாணவர்கள் முழுவதுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முந்தைய அதிமுக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 

இதனை அடுத்து இது சிறந்த  ஆலோசனையாக இருக்கிறது என கலந்து ஆலோசித்த அதிமுக அரசு, அதற்கு ஆணையம் ஒன்றையும் அமைத்தது. முடிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஏழரை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது என நீதி அரசர் கலையரசன் தலைமையிலான குழு பரிந்துரை செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு முதல் ஏழரை சதவீத அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்டனர். 

அவர்களுக்கான முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அந்த தேர்வு முடிவுகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கும் பிற பள்ளி மாணவர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லாமல் ஒரே அளவிலான விகிதங்களில் வந்திருக்கிறது. இந்த செய்தியை கேட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டார்கள் என  பெருமிதத்துடன் சமூக நீதி வெல்லட்டும் என தெரிவித்திருக்கிறார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அண்மையில் நடைபெற்ற முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் தேர்வுகளில் 7.5% இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 75 விழுக்காட்டினரும், பிற மாணவர்களில் 85 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒப்பிட்டளவில் நீட் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், குறைந்த மதிப்பெண் எடுத்து 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. 10% பெரிய வித்தியாசமல்ல.

7.5% இட ஒதுக்கீட்டில்  சேர்ந்தவர்களால்  மருத்துவ படிப்புக்கு ஈடு கொடுக்க முடியுமா? என்று எழுப்பப்பட்ட  ஐயங்களை அரசு பள்ளி மாணவர்கள் தகர்த்திருக்கின்றனர். வாய்ப்பும், தரமான கல்வியும் வழங்கப்பட்டால் தங்களால் சாதிக்க முடியும் என்பதை  அவர்கள் நிரூபித்திருக்கின்றனர்.

நீட்டில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே மருத்துவத் தேர்வுகளில் வெல்ல முடியும்; இட ஒதுக்கீடு  கல்வித் தரத்தை குறைத்து விடும் ஆகிய மாயைகளை  அரசு பள்ளி மாணவர்கள் தகர்த்திருக்கின்றனர். ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தியுள்ளனர். வாழ்த்துகள்! சமூக நீதி வெல்லட்டும்!!" என  டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். 

அதே சமயம், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும் என கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின், பத்து சதவீதமாக உயர்த்தி வழங்கினால் மேலும் அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பயனடைவார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

தனியார் பள்ளி மாணவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல அரசு பள்ளி மாணவர்கள் என்பதை நிரூபித்து விட்ட நிலையில், ஏழரை சதவீதத்தை பத்து சதவீதமாக உயர்த்துவதில் திமுக அரசுக்கு எவ்வித பிரச்சனையும் இருக்காது எனவும் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About NEET Reservation Students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->