7.5% இடஒதுக்கீடு, திமுக உரிமை கோரும் வேளையில், டாக்டர் ராமதாஸ் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுனர் ஒப்புதல் கிடைத்தது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெறிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு நீண்ட தாமதத்திற்கு பிறகு தமிழக ஆளுனர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்களிடையே நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி பயிலும் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கொண்டு வரப்பட்டு, அதே நாளில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு அடுத்த ஓரிரு நாட்களில் ஆளுனர் ஒப்புதல் அளித்திருந்தால் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களிடம் தேவையற்ற பதற்றமும், தவிப்பும் ஏற்பட்டிருக்காது. 7.50% இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு கடந்த மாதமே ஆளுனர் ஒப்புதல் அளித்திருந்தால், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் இந்நேரம் தொடங்கியிருக்கும்.

7.50% இட ஒதுக்கீட்டு சட்டம் குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் கருத்து கேட்டு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதற்கு 29.10.2020 அன்று பதில் வந்ததையடுத்து ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் ஆளுனர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. 7.50% இட ஒதுக்கீடு குறித்த  சட்ட ஆலோசனை நடத்த வேண்டும் என்று ஆளுனர் நினைத்திருந்தால், அதை ஒரு சில நாட்களில் நடத்தி முடித்திருக்கலாம். 46 நாட்கள் தாமதப்படுத்தியிருக்கத் தேவையில்லை. மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கொரோனா அச்சம் காரணமாக ஏற்கனவே தாமதம் ஆகி வந்த நிலையில், சூழலை உணர்ந்தும், மக்களின் மன ஓட்டத்தை அறிந்தும் ஆளுனர் விரைவாக செயல்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் தேவையற்ற குழப்பங்களை தவிர்த்திருக்கலாம்.

7.50% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுனரின் ஒப்புதல் தாமதமாவதை சுட்டிக்காட்டி, உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நான் தான். பாட்டாளி மக்கள் கட்சியின்  தொடர் அழுத்தத்திற்கு பிறகே இந்த விஷயத்தில் பிற கட்சிகளும் குரல் கொடுக்கத் தொடங்கின. நிறைவாக, கால தாமதம் ஆனாலும் 7.50% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின் 7.50% விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்காக முதன் முதலில் குரல் கொடுத்த கட்சி என்ற வகையில் பாட்டாளி மக்கள் கட்சி மிகுந்த மகிழ்ச்சியடைகிறது; பெருமிதம் கொள்கிறது.

7.50% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைத்து விட்ட நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைமுறைகளை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss about governor approved the reservation Bill


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->