வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது நீங்கள் பேசினீர்களா?! பேசியிருந்தால் தூத்துக்குடி சம்பவமே நடந்திருக்காது! வேதனையுடன் சொன்ன அன்புமணி! - Seithipunal
Seithipunal


இரண்டு நாட்களாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நேற்று பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று கட்சி நிர்வாகிகளை கோவையில் சந்தித்து கலந்துரையாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பல்லடம் பகுதியில் உள்ள 60,000  விசைத்தறி தொழில்கள், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்திய காரணத்தினால், மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி, பல்லடம் மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து விசைத்தறிகளுக்கும் கூடுதலாக இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில், எந்த வருமானமும் இல்லாத சூழ்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தியது மேலும் மக்களுக்கு பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாதாந்தோறும் மின் கட்டணம் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஏழு ஆண்டுகளாக இதனை வலியுறுத்தி வருகின்றது. இதனை அவசியம் நிறைவேற்ற வேண்டும்.

பண்டிகை கால நேரத்தில் தனியார் ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றார்கள். சென்னையில் இருந்து கோவை வருவதற்கு விமானத்தில் 3300 ரூபாய் தான் கட்டணம். ஆனால் ஆம்னி பேருந்தில் வருவதற்கு 3700 ரூபா ரூபாய் கட்டணம். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்றப்பட்ட கட்டணத்தை உடனடியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கொங்கு மண்டல பகுதியில் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு கடந்த கால ஆட்சியாளர்கள் நிதி ஒதுக்கீடு செய்து, இப்போது 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனால் நான்கு மாதங்களாக முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அண்மையில் கூட இந்த திட்டத்தை வேகமாக நிறைவேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி இருந்தேன். ஏன் தாமதம் செய்கிறீர்கள் என கேள்வியும் எழுப்பினேன்.

பாண்டியாறு -  புன்னம்புழா திட்டம், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் ஆகிய இரண்டு திட்டங்கள் இந்த பகுதி மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கை. இந்த திட்டம் கேரளாவின் நீர்ப்பிடிப்பு பகுதியில் வருகிறது. இந்த சூழ்நிலையில் வீணாக கடலில் கலக்கும் நீரை கேரளா அரசிடம் பேசி, இந்த திட்டங்களின் மூலமாக தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும். 

கொங்கு பகுதியில் பரம்பிக்குளம் - ஆழியாறு அணையில் இருந்து பிஏபி ஷட்டர் சேதமடைந்த காரணத்தினால் 12 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. இன்றைக்கு காலநிலை மாற்றம் காரணமாக எவ்வளவு தண்ணீரை நாம் சேமிக்கிறோம் என்பது மிக அவசியமானது. தமிழகத்தில் உள்ள அணைகள், குளங்கள், ஏரிகள் அனைத்துமே சேர்த்து 200 டிஎம்சி தண்ணீரை தான் நாம் சேர்த்து வைக்க முடியும். இந்த ஐந்து மாத காலகட்டத்தில் காவிரி ஆற்றில் மட்டும் 530 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. 

இந்த நிலைக்கு காரணம், 55 ஆண்டு காலம் ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தான். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், உபரி நீர் கடலில் கலந்திருக்காது. தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள், நீர் பாசன திட்டங்களுக்கு,  ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 20 ஆயிரம் கோடி ரூபாய் என தமிழக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனை 5 ஆண்டு கால திட்டமாக நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டம், சேலம் மேட்டூர் உபரி நீர் திட்டம், அரியலூர் சோழர் பாசன திட்டம் போன்ற திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். 

இந்தியாவில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 90 சதவீதம் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் உள்ளன. இந்தியாவிற்கு அந்நிய செலாவணியை கொடுப்பதில் கொங்கு மண்டலம் பெரும் பங்கு வகிக்கிறது. 10 லட்சம் பேர் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது, 10 லட்சம் குடும்பங்கள், கிட்ட தட்ட ஐம்பது லட்சம் பேர் இந்த பின்னலாடை நிறுவனங்கள் மூலம் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். கொங்கு மண்டல பின்னலாடை நிறுவனங்களை நாம் பாதுகாக்க வேண்டும். அந்நிய செலாவணியை பொறுத்தவரை ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 70 ஆயிரம் கோடி ரூபாய் வந்து கொண்டிருக்கிறது. இதனை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

சிறிய விலையேற்றம் கூட இங்கே தொழிற்சாலைகள் மூடப்பட சூழ்நிலைக்கு தள்ளப்படும். கடந்த ஆண்டு 237 ரூபாய்க்கு இருந்த நூல் விலை, இந்த வருடம் 467 ரூபாய்க்கு உயர்த்தி உள்ளார்கள். பஞ்சுக்கும் ஜிஎஸ்டி, நூலுக்கும் ஜிஎஸ்டி, அதிலிருந்து உருவாகக்கூடிய பொருளுக்கும் ஜிஎஸ்டி போடுகிறார்கள். மூன்றுக்கும் ஜிஎஸ்டி போடுவதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. நூல் விலை உயர்வால் ஆயிரக்கணக்கான  சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வட்டி இல்லா கடன், ஜாமீன் இல்லா கடன், குறுகிய கால மானியம்  போன்ற சிறப்பு சலுகையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். சலுகை கொடுத்தால் தான் பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் எழுச்சி பெற முடியும். எனவே மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். மாநில அரசும் கடிதம் எழுதினால் மட்டும் போதாது, நேரடியாக மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழக அமைச்சர்கள் வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகமாக விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என ஒவ்வொரு நாளும் நாங்கள் சொல்லி கொண்டிருக்கிறோம்.  அடுத்த தலைமுறைக்கு எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மது, சூது, போதை பொருட்கள் அடுத்த தலைமுறையினரை சூழ்ந்து உள்ளது. இதில், ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்றி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போதை பொருட்களைப் பொறுத்தவரை எங்கு பார்த்தாலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் என்னிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். போதைப்பொருள் விற்பனை அதிகரித்து உள்ளதாகவும், வகுப்பறையிலேயே போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாகவும் ஆசிரியர்கள் என்னிடம் நேரடியாக புகார் அளித்து வருகின்றனர். இது போன்ற கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தான் நடக்கும். தற்போது இங்கும் புகுந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் செய்திகளில் 200 கிலோ, ஒரு டன், 2 டன் போதை பொருளை போலீசார் கைப்பற்றி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கஞ்சா இப்போது கஞ்சா சாக்லேட், கஞ்சா எண்ணெய், கஞ்சா ஸ்டாம்ப் என்று புதிது புதிதாக கிளம்பி உள்ளது. இதில் கஞ்சா ஸ்டாம்ப் என்பது பேப்பரில் தடவப்பட்டு, அதை வாயில் வைத்துக்கொண்டு போதை ஏற்றி கொள்கின்றனர். இது குறித்து தமிழக முதல்வரிடம் கடிதம் மூலமாகவும், அறிக்கையின் மூலமாகவும், நேரிலும் வலியுறுத்தி இருக்கிறேன். இதனை தடுப்பதற்கு போதைப்பொருள் ஒழிப்பு துறையில், போதுமான அளவுக்கு போலீசார் இல்லை. குறைந்தபட்சம் 20 ஆயிரம் காவலர்களை இந்த பணியில் அமர்த்த வேண்டும். போதைப் பொருளுக்கு எதிராக தமிழக அரசு மிகப்பெரிய தாக்குதலை நடத்த வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை நாம் காப்பாற்ற முடியும். 

நீலகிரி மாவட்டத்தில் பசுமை தேயிலையை 12 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக தெரிகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இருபது ரூபாய்க்கு கொள்முதல் செய்தால் தான், லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பசுமை தேயிலையை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறு சதவீதம் கொழுப்பு உள்ள ஒரு லிட்டர் பால் ஆவின் நிறுவனத்தில் 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனத்தின் பால் 74 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். இந்த ஓராண்டில் மட்டும் நான்கு முறை விலையை உயர்த்திருக்கிறார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. தனியார் பால் நிறுவனங்கள் ஒரு மாஃபியா போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழக அரசு தனியார் நிறுவனங்களின் பால் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.

மின்சார கட்டணம், தனியார் ஆம்னி பஸ் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, பால் விலை என தமிழக அரசு அனைத்தையும் விலை உயர்த்தியுள்ளது. ஆனால், மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அவர்களின் வருமானம் குறைந்துள்ளது. கடந்தாண்டு தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறையில் 65 லட்சம் பேர் பதிவு செய்துள்ளார்கள். இந்த ஆண்டு அது 75 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வேலை வாய்ப்பு என்பது எங்குமே இல்லை. இதிலும் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். 

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு டாஸ்மார்க் மது விற்பனைக்கு ஒரு இலக்கை நிர்ணயித்து உள்ளதாக எங்களுக்கு வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழக அரசு கல்விக்கு, சுகாதாரத்துக்கு, விவசாயத்துக்கு, வேலை வாய்ப்புக்கு இலக்கு நிர்ணயிக்கலாம். ஆனால் டாஸ்மார்க் கடைக்கு இலக்கு நிர்ணயிப்பது வெட்கக்கேடானது. இன்னும் சொல்லப்போனால் தீபாவளிக்கு முந்தின நாளும், அடுத்த நாளும் டாஸ்மார்க் கடையை மூடுங்கள்.

கோவை மாநகரத்தில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. ஒரு பக்கம் பாதாள சாக்கடை 10 வருஷமாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மறு பக்கம் மெட்ரோ ரயில் பணி நடந்து கொண்டிருக்கிறது. மெட்ரோ அவசியமான ஒன்று. ஆனாலும் போக்குவரத்தை ஒழுங்குமுறை செய்ய வேண்டும். 

தமிழகத்தில் வடமேற்கு பகுதியில் அல்லது மேற்கு பகுதியில் ஆங்காங்கே ஓரளவுக்கு செழுமையான பகுதி உள்ளது. அங்கெல்லாம் நீர் மேலாண்மை திட்டங்களை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக பவானிசாகர் அணை போல இன்னும் இரண்டு மூன்று அணைகளை கட்ட வேண்டும். இது தேவையானது. பவானி அணையை இன்னும் உயர்த்த வேண்டும். 31 டிஎம்சி தான் அதன் கொள்ளளவு. அதை ஒரு 50 டிஎம்சி அளவுக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

காலநிலை மாற்றம் காரணமாக நாம் அதிகப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சென்னையில் மேலும் 10 ஏரிகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஏரியும் ஒரு டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் அளவுக்கு அமைக்க வேண்டும். ஏரிகளை மன்னர்கள் தான் உருவாக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளதா என்ன? நாமும் உருவாக்கலாம். 2000-3000 ஏக்கரில் நாமும் ஒரு ஏரியை உருவாக்கலாம். மழைக்காலத்தில் அந்த ஏரிகளுக்கு பம்பு மூலம் நீரை  நிரப்பலாம்.

தமிழகத்தில் நெற்களஞ்சியாமாக உள்ள டெல்டா எவ்வளவு முக்கியமான பகுதி. அதேபோல இந்த கோவை கொங்கு மண்டலம் ஒரு முக்கியமான, பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி. காவிரி டெல்டா நமக்கு சோறு போடும் மண். அதனை பாதுகாக்கப்பட்ட காவிரி வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி நாங்கள் போராட்டம் நடத்தி, அதனை தற்போது கொண்டு வந்துள்ளார்கள். அதேபோன்று கொங்கு மண்டலம் தொழில் மண். இந்த மண் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக்கூடிய மண். 

மத்திய அரசுக்கு ஒவ்வொரு மாநிலமும் மருத்துவ படிப்பில் முதுநிலைக்கு 50 சதவீத இடங்களையும், இளநிலைக்கு 15 சதவீத இட இடங்களையும் ஒதுக்க வேண்டும். இது ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைக்கும் எதிரானது. இந்த முடிவு கடந்த 15-20 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நடைமுறைப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு கூறி இருக்கிறது. அதெல்லாம் சரி தான், ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது பொருந்தாது. அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ கல்லூரி வந்துவிட்டது. இந்தியாவில் அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழ்நாட்டில் தான். இந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் நமது தமிழகத்தை சேர்ந்த பிள்ளைகள் படிக்க வேண்டும். இங்கேயே முதுநிலை மருத்துவ படிப்பு படித்தால் தான், இங்கேயே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் பணியாற்ற முடியும். பிகார் மாநிலத்தில் இருந்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்த படித்துவிட்டு, அவர்கள் மாநிலத்திலேயே சென்று பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இதே நிலை இன்னும் பத்தாண்டுகளுக்கு தொடர்ந்தால், நம்முடைய அரசு மருத்துவமனைகளில் கார்டியாலஜிஸ்ட் போன்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த நிலைக்கு நாம் செல்லவிடக் கூடாது. 

ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களில், மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனம் மட்டுமல்லாமல் அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களிலும் இணைப்பு மொழி என்பது இதற்கு முன்பு ஆங்கிலமாக இருந்ததை ஹிந்தியாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு, தமிழுக்கு பாதிப்பு இருக்காது என்று பாஜகவினர் உள்ளிட்டவர்கள் பேசி இருப்பார்கள். அது எப்படி பாதிப்பில்லாமல் இருக்கும்? ஹிந்தி என்பது இந்தியாவில் உள்ள 22 அலுவல் மொழிகளில் ஒன்று. அவ்வளவுதான். இந்தியாவில் அதிக பேர் ஹிந்தி பேசுகிறார்கள். அதற்காக ஏன் மற்ற மாநிலங்களில் ஹிந்தியை திணிக்க வேண்டும்.

தமிழகத்தில் இருந்த ஒரு மாணவன், ஒரு மாணவி, மத்திய பிரதேசத்தில், உத்தர பிரதேசத்தில், குஜராத்தில், ஏன் டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் படிக்கட்டும். அங்கு படிப்பதினால் ஹிந்தி கட்டாயம் படிக்க வேண்டுமா? ஹிந்தி தெரியவில்லை என்றால். அங்கு போய் படிக்க முடியாதா? இதில் எங்கே இந்தியாவில் ஒற்றுமை உள்ளது. இது ஒரு தவறான கொள்கை முடிவு. எதையும் திணிக்க கூடாது. ஹிந்தியை கற்றுக் கொள்வது அவசியம் என்றால் கற்றுக் கொள்ளப் போகிறார்கள். திணித்தால் அது நிச்சயம் எதிர்வினையாற்றும். 

என்னுடைய அடையாளமே என்னுடைய தாய் மொழி தமிழ்தான். இந்தியாவின் என்னுடைய அடையாளம் தமிழன். என்னுடைய மொழியை, என்னுடைய அடையாளத்தை அழித்துவிட்டு, உங்களுடைய அடையாளத்தை திணிக்க கூடாது. இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேள்விக்குறியாக மாறும். இது ஒரு தவறான போக்கு. மத்திய அரசு ஹிந்தியை பல வகையில் திணிக்க பார்த்துக் கொண்டிருக்கிறது. அதை கைவிட்டு விடுங்கள். அது தேவையில்லை. 

இது தமிழகத்திற்கான பிரச்சனை மட்டும் இல்லை. கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில், ஒரிசாவில், மகாராஷ்டிராவில் எதிர்ப்பு இருக்கிறது. ஆனாலும் மீறி மீறி எப்படியாவது ஹிந்தியை திணித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. நிச்சயமாக மத்திய அரசு இதனை கைவிட்டு விடுவது நல்லது. ஹிந்தியை தாய்மொழியாக உள்ள மாநிலங்களில், மாநில கல்வி நிறுவனங்கள்  இது போன்ற செயலில் ஈடுபட்டால் பிரச்சனை இல்லை. ஆனால், மத்திய அரசினுடைய கல்வி நிலையங்களில் அதனை செய்யக்கூடாது. மத்திய அரசு கல்வி நிறுவனம் என்பது இந்திய அளவில் அனைவரும் படிக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால் இந்தி கற்றுக் கொண்டால் தான் படிக்க முடியும் என்று சொல்வது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை காவல்துறையினருக்கு ஒரு பாடமாக அமையும். அவர்களுக்குள்ளாகவே இந்த அறிக்கையை வைத்து, அடுத்து இது போன்ற ஒரு சூழ்நிலையில் நாம் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை அவர்கள் பாடமாக எடுத்து, கலந்து ஆலோசிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளோம். 1987 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17ஆம் தேதி, ஒரே நாளில் எங்களுடைய இயக்கத்தை சேர்ந்த 21 நபர்களை காவல்துறையினர் சுட்டு படுகொலை செய்தார்கள். 

இன்று நீங்கள் கேட்கின்ற கேள்வி போல அன்று யாரும் கேள்வி கேட்கவில்லை. எந்த கட்சியும் கேட்கவில்லை. எந்த ஒரு ஊடகமும் கேள்வி கேட்கவில்லை. அன்று நீங்கள் கேள்வி கேட்டிருந்தால், இன்று இந்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்திருக்காது. இன்றாவது இதை கையில் எடுத்து, இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலத்தில் நடைபெறாமல் காவல்துறை பார்த்துக் கொள்ள வேண்டும்" என அன்புமணி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About 1987 Vanniyar Reservation Protest


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->