திமுகவின் மாஸ்டர் பிளான்! பெரம்பூரில் ‘பெயர் குழப்பம்’!– விஜய்க்கு எதிராக ஒரே பெயரில் பலர்! ஓபிஎஸ்ஸுக்கு நடந்தது மாதிரியே!
Dmk Master Plan Name Kaanbsin in Perambur Money with the Same Name Against Vijay Same Thing Happened to Ops
தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு அதிகரித்து வரும் நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதி தற்போது மிகவும் கவனிக்கப்படும் ‘விஐபி’ தொகுதியாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்த தொகுதியில் போட்டியிடுவதால், அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், விஜய்க்கு எதிராக ஒரே பெயர் அல்லது ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட வேட்பாளர்கள் பலர் களமிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எம். ஜோசப், எஸ். ஜோசப், கே. விஜய், ஜி. விஜய் ஆகியோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் முழுப் பெயரான ‘ஜோசப் விஜய்’ என்பதுடன் ஒத்துப்போகும் வகையில் இந்த பெயர்கள் அமைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பொதுவாக, வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான ஒரே பெயர் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவது புதிய விஷயம் அல்ல. வாக்குச்சாவடியில் சின்னத்தை விட பெயரை பார்த்து வாக்களிக்கும் சிலர் தவறுதலாக வேறு வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இருப்பதால், இது முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
பெரம்பூர் தொகுதியில் மொத்தம் 66 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதனால் போட்டி மேலும் கடுமையாகியுள்ளது. மேலும், விஜய் பெயரில் சொத்து வரி தொடர்பாக எழுந்த எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு போட்டியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்ற நிலைமை கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் ஏற்பட்டது. ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக ஒரே பெயர் கொண்ட பலர் போட்டியிட்டது பெரும் விவாதமாகியது. அந்த தேர்தலில் ஓபிஎஸ் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று டெபாசிட் பெற்றிருந்தாலும், மற்ற பெயர் ஒற்றுமை வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
அதேபோன்று, பெரம்பூரிலும் இந்த ‘பெயர் அரசியல்’ எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தான் தெளிவாகும். ஆனால், வாக்காளர்களை குழப்பும் இந்த உத்தி, இம்முறை தேர்தலில் முக்கியமான காரகமாக மாறியுள்ளது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகும்.
English Summary
Dmk Master Plan Name Kaanbsin in Perambur Money with the Same Name Against Vijay Same Thing Happened to Ops