திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! காங்கிராஸை கதறவிட்ட ஸ்டாலின்! கதர் கட்சியில் வெடித்த மோதல்! கப்சிப் ஆன ’கை’!
DMDK joins DMK alliance Stalin slams Congress Clashes erupt in Khattar party Kai becomes a Kapchip
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ள நிலையில், அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. நீண்டநாள் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, கூட்டணிக் கணக்குகளை புதிதாக அமைக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக தேமுதிக எந்த அணியில் சேரும் என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக இருந்தது. கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரே மேடையில் பங்கேற்றது, அதிமுக அணியுடன் தேமுதிக இணையலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணையும் வாய்ப்பு பேசப்பட்டது.
ஆனால் இந்த ஊகங்களை மாற்றும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்ததையடுத்து, தேமுதிக திமுக கூட்டணியில் இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆலோசனைக்குப் பிறகே எடுக்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதி–விஜயகாந்த் இடையிலான பழைய நட்பும் இந்த கூட்டணிக்கு ஒரு அடிப்படையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தேமுதிக இணைவு காரணமாக கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான சமநிலை மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இம்முறை திமுக அதிக தொகுதிகளில் நேரடியாக களம் இறங்கும் சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் காங்கிரஸ் தரப்பில் ஒருவித பதற்றம் நிலவுவதாக கூறப்படுகிறது. தேமுதிக இணைவு காரணமாக தங்களுக்கான தொகுதிகள் குறையக்கூடும் என்ற அச்சம் காங்கிரஸ் நிர்வாகிகளில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. முரண்பாடு ஏற்பட்டால் கூட்டணியில் இருந்து விலகச் சொல்லும் நிலை உருவாகக்கூடும் என்பதால், சிலர் திமுக தரப்புடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், கடந்த மாதங்களில் காங்கிரஸ் சில நிர்வாகிகள் திமுக குறித்து வெளிப்படையாக விமர்சித்தது திமுக தலைமையில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. “ஆட்சியில் பங்கு இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்தது, இந்த மனக்கசப்பின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில் தேமுதிக கூட்டணிக்கு வரவேற்கப்பட்டது, ஒரு அரசியல் “மாஸ்டர் ஸ்ட்ரோக்” என சிலர் மதிப்பிடுகின்றனர்.
தற்போது தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அனைத்து கூட்டணிக் கட்சிகளின் மரியாதையும் காக்கப்படும் வகையில் முடிவு எடுக்கப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காங்கிரஸ் மாநில தலைமைக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
தேமுதிக இணைவு திமுக கூட்டணிக்கு வலுவூட்டலா? அல்லது கூட்டணிக்குள் புதிய சிக்கல்களை உருவாக்குமா? என்பதற்கு வரும் வாரங்களிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளே பதில் அளிக்கவுள்ளன. 2026 தேர்தல் முன்னோட்டம் இதன் மூலம் மேலும் சூடுபிடித்துள்ளது.
English Summary
DMDK joins DMK alliance Stalin slams Congress Clashes erupt in Khattar party Kai becomes a Kapchip