சோனியா காந்தியின் 1980 வாக்காளர் பட்டியல் விவகாரம்: வழக்கை மீண்டும் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
Delhi Court Reopens 1980 Voter List Case Against Sonia Gandhi Orders Fresh Hearing
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, கடந்த 1983-ஆம் ஆண்டில்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற்றார். இருப்பினும், குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே, அதாவது 1980-ஆம் ஆண்டிலேயே தனது பெயரைச் சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாகக் குற்றம்சாட்டி, வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மனுதாரர் தரப்பில் சோனியா காந்திக்கு எதிராகப் போதிய மற்றும் வலுவான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி சார்பில் மேல்முறையீட்டுச் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சீராய்வு மனு, டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சோனியா காந்திக்கு எதிரான மனுவை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் உள்ள குற்றச்சாட்டுகளைப் புதிதாக விசாரணை செய்யுமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வழக்கை மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தார்.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, சோனியா காந்தி மீதான 1980-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் வழக்கு தொடர்பான புதிய விசாரணை வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. பல ஆண்டுகளுக்கு முந்தைய இந்த விவகாரம் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
English Summary
Delhi Court Reopens 1980 Voter List Case Against Sonia Gandhi Orders Fresh Hearing