பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட தொகைக்கும் மேலாக கூடுதலாக நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

2019 ஆண்டு நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த மிகக்கொடுமையான குற்றசம்பவமாக கருதப்படும் இந்த வழக்கை விசாரணை செய்த கோயம்புத்தூர் மகளிர் கோர்ட்டு சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்த கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டைனை என வழங்கப்பட்டுள்ள கடுமையான தண்டனை குற்றசெயலில் ஈடுபட முனைவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும்.

தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண்களுக்கு பல்வேறு வகைகளிலும் அதிகாரம் அளித்திட தமிழ்நாடு அரசு சிறந்த முயற்சிகளை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் தோழி விடுதிகள், புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற முன்னோடி திட்டங்களின் விளைவாக மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இரண்டிலும் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் இம்மாநிலத்தில் பணிபுரிகின்றனர்.

பெண்களின் பாதுகாப்பிற்கு அரணாகத் திகழக்கூடிய திராவிட மாடல் அரசு, பெண்களுக்கு எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு அஞ்சிடும் வகையில் பெண்களுக்குத் துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்டத்தை சமீபத்தில் திருத்தம் செய்து குற்றச்செயல்களுக்கான தண்டனையை மிகவும் கடுமையாக்கி உள்ளது.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்திலும் பெண்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கும் விதமாக உரிய சட்டத்திருத்தத்தினை சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ளது.இதனால், குற்றவாளிகள் தங்கள் குற்றங்களுக்கு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

இவ்வழக்கில் கடந்த 13.05.2025 அன்று கோயம்புத்தூர் மகளிர் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்க மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்தவழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் கோர்ட்டு விசாரணைக் குழு ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.

அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. அந்த வகையில், கோர்ட்டு உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister orders to provide additional compensation to the women who were victims of the Pollachi incident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->