ஹெலிபேடில் குழப்பம்! தவறான தரையிறக்கம் -வரவேற்பில்லாமல் இறங்கிய சித்தராமையா...!
Chaos helipad Wrong landing Siddaramaiah disembarks without welcome reception
கர்நாடக அரசியலில் சிறிய குழப்பமே பெரிய பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ராய்ச்சூர் மாவட்டத்தில் அரங்கேறியது. முன்னாள் அமைச்சர் அமரேகவுடா பாட்டீல் பையாபுராவின் பேரனும், எம்.எல்.ஏ. ஷரணகவுடா பாட்டீலின் மகனுமானவரின் திருமண விழா லிங்கசுகுருவில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமார், அமைச்சர் ஜர்கிஹோலி ஆகியோர் தனித்தனியாக ஹெலிகாப்டர்களில் வர திட்டமிட்டிருந்தனர்.
முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் தரையிறங்க ராய்ச்சூர் சாலையில் இரண்டு தனி ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன.
அமைச்சர் ஜர்கிஹோலிக்காக கலபுரகி சாலையில் தனி ஹெலிபேடும் தயார் நிலையில் இருந்தது. நெறிமுறைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு, வரவேற்பு, அதிகாரிகள் என அனைத்தும் தயாராக காத்திருந்தனர்.
ஆனால் எதிர்பாராத வகையில் ஒரு சிறிய தவறு பெரிய குழப்பத்தை உருவாக்கியது. முதல்-அமைச்சர் சித்தராமையா வந்த ஹெலிகாப்டரை, அவருக்காக அல்லாமல் அமைச்சர் ஜர்கிஹோலிக்கு ஒதுக்கப்பட்ட ஹெலிபேடில் பைலட் தவறுதலாக தரையிறக்கினார்.
ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய சித்தராமையாவை வரவேற்க அதிகாரிகள் யாரும் இல்லாமல், ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டும் இருந்தது. இந்த நிலைமை அங்கு சில நிமிடங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது.தவறை உணர்ந்த பைலட் உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவித்தார்.
அதிகாரிகள் விரைவாக அங்கு வந்தபோதும், அதற்குள் சித்தராமையா நேரடியாக திருமண நிகழ்ச்சிக்குச் சென்று விட்டார். இதேவேளை, அவருக்காக தயார் செய்யப்பட்ட ஹெலிபேடில் பின்னர் அமைச்சர் ஜர்கிஹோலியின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
பைலட்டின் இந்த குழப்பமே சம்பவத்திற்குக் காரணம் என தெரியவந்தது. திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பிய முதல்-அமைச்சர் சித்தராமையாவுக்கு பின்னர் போலீசார் முறையான மரியாதை செலுத்தினர். சிறிய தவறு பெரிய பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Chaos helipad Wrong landing Siddaramaiah disembarks without welcome reception