'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே' - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விவகாரத்தில் பாஜக பதிலடி!
BJP Narayanan thirupathy say about GRS vand Vanjinadhan issue
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் ஒரு சார்பாக நடந்து கொள்வதாக கூறி அவர் மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து வாஞ்சிநாதன் என்ற வழக்கறிஞர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு மனு அளித்ததாகவும், ஆனால் தற்போது நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் அந்த கடிதம் குறித்து கேள்வி கேட்பதாகவும், நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முனைவதாகவும், உச்சநீதி மன்றம் முடிவெடுக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் முன்னாள் நீதிபதி கே.சந்துரு அவர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில் திரு.சந்துரு அவர்கள் உட்பட எட்டு முன்னாள் நீதிபதிகளின் ஒப்புதலோடு இந்த கடிதம் அனுப்பப்படுவதாகவும், எழுத்து மூலமாக மற்றவர்கள் தனக்கு இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு அதிகாரம் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் குறிப்பிட்டிருந்த எட்டு பேரில் முன்னாள் நீதிபதி கே.கே.சசிதரன் அவர்கள் திரு.சந்துரு அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல தாம் எழுத்து மூலமாக எந்த அதிகாரத்தையம் யாருக்கும் அளிக்கவில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து தன்னிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை என்றும் திரு.சந்துரு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவாகரத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக தான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் சிறந்த நீதிபதிகளில் ஒருவர் 'என்று சொல்லப்பட்ட' திரு. சந்துரு அவர்களின் இந்த 'போலி, பொய்' அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. மற்றொரு நீதிபதியின் பெயரை தவறாக பயன்படுத்தும் அவசியமும், அவசரமும் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அவருக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத ஒருவரை தொடர்புபடுத்துகிற அழுத்தத்தை கொடுத்தது யார் என்கிற விவரங்களை திரு.சந்துரு அவர்கள் வெளியிடுவதோடு, முன்னாள் நீதிபதி கே.கே. சசிதரன் அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டதற்கு அவரிடத்திலும், நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களிடத்திலும் மன்னிப்பு கேட்பாரா?
மேலும், கடந்த மாதத்தில் நடைபெற்ற காவல் நிலைய 'லாக்-அப்' கொலைகளிலோ, கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்தோ எந்த கருத்தும் சொல்லாத நிலையில், இந்த விவகாரத்தில் முன்னாள்.நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் திரு.சந்துரு அவர்கள் கொண்டுள்ள அக்கறை வியப்பளிக்கிறது. அது ஒருபுறம் இருந்தாலும், உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியதாக சொல்லப்படுகிற வாஞ்சிநாதன் என்கிற வழக்கறிஞரின் உள்நோக்கத்தை நாம் சந்தேகிக்க வேண்டிய கட்டாயம் பல்வேறு காரணங்களால் எழுகிறது.
1. கடந்த மாதம், மதுரை அவுட்-போஸ்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை 'பார்ப்பனீய' என்ற ஜாதி குறியீட்டை சொல்லி வாஞ்சிநாதன் தடுத்து நிறுத்திய பின்னர், காவல் துறையினர் தலையிட்டு அவரை அப்புறப்படுத்தியது உண்மையா இல்லையா?
2. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடலாம் என வாஞ்சிநாதன் வாதிட்டது உண்மையா இல்லையா?
3. மதுரை ஆதீனம் விவகாரத்தில் மதுரை ஆதீனத்தை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வாஞ்சிநாதன் ஆதின மடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தது உண்மையா இல்லையா?
4.ஈஷா யோகா சத்குரு மீது ஆதாரமற்ற புகார்களை அடுக்கி மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில், வாஞ்சிநாதன் புகார் கொடுத்தது உண்மையா இல்லையா?
5. முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பார் கவுன்சிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது உண்மையா இல்லையா?
4. மேலும், 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் விவகாரத்தில் 100வது நாள் போராட்டத்தில் வாஞ்சிநாதன் மீது சட்ட பிரிவு-147 (கலவரம் செய்யும் குற்றம்), சட்ட பிரிவு- 148 (சட்ட விரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதம் வைத்திருத்தல்), சட்ட பிரிவு -188 (ஒரு பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றாதது), சட்ட பிரிவு 353 (பொது ஊழியரை அவரது சட்டப்பூர்வ கடமையை செய்யவிடாமல் தடுப்பது), சட்ட பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு ஜூன் 20, 2018 அன்று கைது செய்யப்பட்டது உண்மையா இல்லையா?
(இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதனுக்கு பின்னர் பிணை அளித்ததும் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் தான், அதையும் உள்நோக்கத்தோடு தான் தீர்ப்பளித்தார் என்று சொல்வார்களா?)
இது போன்று ஹிந்து மதத்திற்கு எதிராக, அரசுக்கு எதிராக, மத நம்பிக்கைகளுக்கு எதிராக, பிராமண சமுதாயத்திற்கு எதிராக குறை சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், பிறப்பால் பிராமண சமுதாயத்தை சேர்ந்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை குறை சொல்வது வியப்பளிக்கவில்லை. ஆனால், பல்லாண்டு காலம் நீதிபதிகளாக வீற்றிருந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக, கொள்கைகளுக்கு எதிராக, கலாச்சாரத்திற்கு எதிராக, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக இருப்பவருக்கு ஆதரவாக செயல்படுவது தான் அதிர்ச்சியளிக்கிறது, வியப்பளிக்கிறது.
முன்னாள் நீதிபதி பரந்தாமன் அவர்களுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் எப்படி தீர்ப்பளிக்க வேண்டும், எப்படி செயல்படவேண்டும் என்றெல்லாம் வகுப்பு எடுத்தது அவரின் எண்ண ஓட்டத்தை, உள்நோக்கத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த சந்தேகத்தை தவறான தகவலை வெளிப்படுத்திய கடிதம் திரு. சந்துரு அவர்களின் கடிதம் உறுதி செய்கிறது.
'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே" என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. இந்த விவகாரத்தில் திராவிடர் கழகத்தினர், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டோரின் புலம்பல்களை பார்க்கும் போது, 'திராவிட மாடலின்' ஒரு அங்கம் தான் இந்த விவகாரம் என்பது தெளிவாகிறது. நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் செயல்களை தொடர்புடையவர்கள் நிறுத்தி கொள்வது நல்லது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan thirupathy say about GRS vand Vanjinadhan issue