சட்டசபையில் சரமாரி கேள்விகள்...! பாலம் முதல் மருத்துவ வசதி வரை அமைச்சர்கள் அதிரடி பதில்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் இன்று சமூகநீதி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு தொகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் குறைபாடு, மருத்துவ கட்டமைப்பு, சாலை மற்றும் மேம்பாலத் தேவைகள், விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உறுப்பினர்கள் அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

சட்டசபையில் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தொடர்ந்து பதிலளித்து வருகின்றனர்.

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மானியக் கோரிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சட்டசபைக்கு வருகை தந்தார்.

வேலூர் காட்பாடி ரெயில் நிலையம் முதல் பாலாறு பாலம் வரையிலான பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க அரசு முன்வருமா என எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

கீழ்வேளூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பா.ம.க. எம்.எல்.ஏ. லதா வலியுறுத்தினார். கோரிக்கையை பரிசீலித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என உறுப்பினர் மாரிமுத்து வலியுறுத்தினார். பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடக்கும் நிலை உள்ளதால், அங்கு மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான உயர்மட்ட மேம்பாலத் திட்டத்தின் நிலை குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரையிலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 8 வழிச்சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட நவீன மருத்துவ உபகரணங்களை கூடுதலாக வழங்க வேண்டும் என பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார் கோரிக்கை விடுத்தார். மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, தேவை இருப்பின் கூடுதல் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டயாலிசிஸ் கருவி வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ. விஜயகுமார் வலியுறுத்தினார். மருத்துவமனையில் ஆய்வு நடத்தி, தேவைக்கேற்ப டயாலிசிஸ் கருவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

சட்டசபை நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அங்கு தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

எச்1என்1 காய்ச்சலை கட்டுப்படுத்த முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என உறுப்பினர் லட்சுமணன் கேள்வி எழுப்பினார். தற்போது எச்1என்1 காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக எஸ்.பி. வேலுமணி சுட்டிக்காட்டினார். மருத்துவமனைக்கு தேவையான அளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை விரைவில் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்தில் இருளர், காட்டுநாயக்கன் உள்ளிட்ட மலைவாழ் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ. ராஜா கேள்வி எழுப்பினார். சாதிச்சான்றிதழ் வழங்குவது தொடர்பான கோரிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என எம்.எல்.ஏ. சரவணன் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக விரிவாக ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுவதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அரி கேள்வி எழுப்பினார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி உள்ளதாக தெரிவித்த அமைச்சர், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனையிலும் இந்த வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பணங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது அமைக்கப்படும் என எம்.எல்.ஏ. சதீஷ் கிறிஸ்டோபர் கேள்வி எழுப்பினார். 2026-27-ம் ஆண்டு கொள்முதல் பருவ சாகுபடியை கருத்தில் கொண்டு அங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார். மேலும், கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.

மொடக்குறிச்சியில் நீர்நிலை புறம்போக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்கப்படவில்லை என த.வெ.க. எம்.எல்.ஏ. சண்முகன் கேள்வி எழுப்பினார். சம்பந்தப்பட்ட பகுதி நீர் ஓடும் இடமாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாகவோ அல்லது தனி மாநகராட்சியாகவோ அறிவிக்க வேண்டும் என த.வெ.க. எம்.எல்.ஏ. ஈசிஆர் சரவணன் வலியுறுத்தினார். சோழிங்கநல்லூரைச் சேர்ந்த 7 ஊராட்சிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலும், 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இடம்பெற்றுள்ளதால், பொதுமக்கள் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கலசப்பாக்கம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தப்படுமா என உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார். மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

செஞ்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக தனிக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தும், அறுவை சிகிச்சை அரங்கம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்ததாக பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் ஆனந்திடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 10 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை அரங்கம் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார். தற்போது அங்கு சிசேரியன் அறுவை சிகிச்சையும் சிறப்பாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட கணேஷ்குமார், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

barrage questions Assembly From bridges medical facilities ministers give quick answers


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->