முஸ்லிம் ஓட்டு வங்கிக்காக 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் வக்ப் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார்: அமித்ஷா குற்றசாட்டு..!
Amit Shah accuses Mamata Banerjee of opposing Operation Sindoor and Waqf Act for Muslim vote bank
மேற்கு வங்கத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற வுள்ளது. இந்த முறை அங்கு எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அங்கு சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தற்போது மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வின் மூத்த தலைவருமான அமித்ஷா அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் வக்ப் சட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

முர்ஷிதாபாத்தில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா மேலும் கூறியதாவது: முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்துவதற்காக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் வக்ப் சட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார். இதன் மூலம் இந்நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவர் அவமதித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்த மம்தாவுக்கும், அவரின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், வக்ப் சட்டத்திற்கு எதிராக முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரம் மாநில அரசின் ஆதரவுடன் நடந்தது என்றும், அப்போது சிஆர்பிஎப் வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சகம் முயற்சித்தது எனவும்,அதற்கு மம்தா ஆதரவு தரவில்லைஎனவும், இதனால் தான் கலவரம் தொடர்ந்தது என்று குறிப்பிட்டதோடு, திருப்திபடுத்தும் அரசியலுக்காக வக்ப் சட்டத்திற்கு மம்தா எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கதேசத்தவர்கள் எளிதாக ஊடுருவ வேண்டும் என்பதற்காக மேற்கு வங்க மாநில எல்லையை முதல்வர் மம்தா திறந்துவிட்டுள்ளார் என்றும், அவரால் ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுத்த முடியாது. பா.ஜ., வால் மட்டுமே முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், எல்லை பாதுகாப்பு படையினருக்கு தேவையான நிலத்தை மம்தா தலைமையிலான அரசு ஒதுக்கவில்லை என்றும், அந்த நிலத்தை ஒதுக்கிய பிறகு, ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும். அப்படிநடக்கக்கூடாது என்பதற்காக தான் நிலத்தை தர அம்மாநில அரசு மறுக்கிறது என்று அமித்ஷா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Amit Shah accuses Mamata Banerjee of opposing Operation Sindoor and Waqf Act for Muslim vote bank