அதிரடி பேச்சு! இந்தியாவை அணு ஆயுதத்தை காட்டி எந்த நாடும் அச்சுறுத்த முடியாது! - மாஸ்கோவில் எம்.பி கனிமொழி
Action speech No country can threaten India with nuclear weapons MP Kanimozhi in Moscow
கடந்த ஏப்ரல் 22ம் தேதி, காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ''ஆப்ரேஷன் சிந்தூர்'' நடவடிக்கையும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலும் குறித்து சர்வதேச நாடுகளுக்கு தெளிவாக விளக்குவதற்காக, அனைத்துக்கட்சி எம்.பிக்களை உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன.

இக்கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமையில் ஒரு எம்.பிக்கள் குழுவினர் ரஷ்யா சென்றனர்.மேலும், மாஸ்கோ நகரில் ரஷ்ய கூட்டமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரேருடென்கோவை இந்திய எம்.பிக்கள் குழுவினர் சந்தித்து உரையாடினார்.
மேலும், லிபரல்-ஜனநாயகக் கட்சியின் கீழ் செயல்படும் சபை சர்வதேச விவகாரக் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி தலைமையிலான ரஷ்ய எம்பிக்கள் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் வட்டமேசைக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர்.அந்த சந்திப்பின்போது, பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து இந்திய எம்பிக்கள் குழுவினர் விரிவாக விளக்கங்களை வழங்கினர்.
கனிமொழி:
இதுத்தொடர்பாக, கனிமொழி கருணாநிதி எம்.பி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ''அனைத்து வகையான பயங்கரவாதத்தையும், தோற்கடிப்பதற்கான இந்தியாவின் தெளிவான மற்றும் நிபந்தனையற்ற உறுதியையும், அதை ஒழிப்பதற்கான நமது சமரசமற்ற நிலைப்பாட்டையும் தேசிய உறுதியையும் வலியுறுத்தி, சர்வதேச விவகாரங்களுக்கான ரஷ்ய எம்.பிக்கள் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் உறுப்பினர்களிடம் இந்தியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு விளக்கி தெரிவித்தது'' என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா:
இதில் ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,' பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்காக ரஷ்யா இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது' என்று தெரிவித்துள்ளது.
கனிமொழி:
மேலும், மாஸ்கோவில் நிருபர்களை சந்தித்த கனிமொழி எம்.பி. தெரிவித்ததாவது, "இந்தியா-பாக்கிஸ்தான் மோதல் குறித்த பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதோடு, பாகிஸ்தான் அணுசக்தி நாடு என்றும், அது அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், நாங்கள் உண்மையை வெளிப்படுத்தவும், உண்மையில் நடந்ததை தெளிவுபடுத்தவும் விரும்பினோம்.
மேலும், அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்பதையும் நாங்கள் தெளிவாக தெரிவிக்க விரும்பினோம். இந்தியா எப்போதும் ஒருமைப்பாட்டிற்காகவும், நேர்மைக்காகவும், அமைதிக்காகவும் தொடர்ந்து போராடும். தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து நிற்போம்" என்று தெரிவித்தார்.
English Summary
Action speech No country can threaten India with nuclear weapons MP Kanimozhi in Moscow