தமிழக பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500 திட்டம்? ஓகே சொன்ன சிஎம் விஜய்! பட்ஜெட்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான முதல் முழுமையான பட்ஜெட்டை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய நலத்திட்டங்கள், தொழில் வளர்ச்சி சார்ந்த அறிவிப்புகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறிவித்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக அமைந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பல மாநில அரசுகளும் பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி திட்டங்களை வெவ்வேறு அளவுகளில் செயல்படுத்தி வருகின்றன.

அதேபோல், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் 2026–27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக முதலமைச்சர் விஜய் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தும் காலக்கெடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், புதிய முதலீட்டு முன்மொழிவுகள், தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமைச் செயலக வட்டாரங்களின் தகவலின்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் மட்டுமல்லாமல், ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், திருமண உதவியாக ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை, மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு, ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதிச்சுமை, பயனாளர்களைத் தேர்வு செய்யும் அளவுகோல்கள், கட்டம் கட்டமாக அமல்படுத்தும் நடைமுறை போன்ற அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மேற்கண்ட அனைத்து திட்டங்களும் தற்போது ஆலோசனை நிலையில் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவை நடைமுறைக்கு வருமா, எந்த வடிவத்தில் அமல்படுத்தப்படும் என்பது குறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வரவிருக்கும் பட்ஜெட் உரைக்குப் பிறகே தெளிவாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 2500 scheme for female heads of households in the Tamil Nadu budget CM Vijay has given the green light A surprise awaits in the budget


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->