தெளிவற்ற விதிகள்... தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு! - யுஜிசி-யைக் கடுமையாகச் சாடிய உச்ச நீதிமன்றம்
Vague rules prone misuse Supreme Court severely criticized UGC
இந்திய உயர்கல்வி வளாகங்களில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருக்கும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை வேரறுக்கவும், இட ஒதுக்கீடு முறையைச் சீராகச் செயல்படுத்தவும் கடந்த ஜனவரி 13, 2026 அன்று "சமத்துவ மேம்பாட்டு ஒழுங்குமுறைகள் 2026" எனும் அதிரடி விதிகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்தது. இந்த விதிகளின்படி, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் கட்டாயமாக ஒரு 'சம வாய்ப்பு மையத்தை' (Equal Opportunity Centre) அமைக்க வேண்டும்.

மேலும், கல்வி நிறுவனத் தலைவரின் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட 'சமத்துவக் குழு' உருவாக்கப்பட வேண்டும்; இதில் 50 சதவீத உறுப்பினர்கள் SC, ST, OBC, மாற்றுத்திறனாளிகள் அல்லது பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, இதுவரை நிலவி வந்த பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பு வரம்பானது, தற்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (OBC) விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புகார்களைப் பதிவு செய்ய 24 மணிநேர உதவி எண் மற்றும் இணையதளம் உருவாக்கப்பட வேண்டும் என்பதோடு, புகார் வந்த 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
ஒருவேளை விதிகளை மீறினால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் நிதி உதவி அல்லது அங்கீகாரத்தையே ரத்து செய்யும் அதிகாரம் UGC-க்கு வழங்கப்பட்டது.இருப்பினும், இந்த அதிரடி மாற்றங்களுக்கு உயர்சாதியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2026-ஆம் ஆண்டின் புதிய விதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும் வரை பழைய 2012-ஆம் ஆண்டு விதிகளே நடைமுறையில் இருக்கும் என்றும், இந்த இடைக்காலத் தடையால் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தில் எந்தவொரு தேக்கநிலையும் ஏற்படக்கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Vague rules prone misuse Supreme Court severely criticized UGC