இந்திய உணவு உற்பத்தி 37.6 கோடி டன்களை எட்டியுள்ளது; பிரிக்ஸ் வேளாண் மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்..!
Union Minister announces at the BRICS Agriculture Conference that India's food production has reached 376 million tonnes
பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூரில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது;
'அதிதி தேவோ பவ' அதாவது விருந்தினரே தெய்வம் என்பது இந்திய பாரம்பரியம். அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில் விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன் என்று அனைவரையும் வரவேற்றதோடு, உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக கருதும் 'வாசுதேவ குடும்பகம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உலகளாவிய ஒற்றுமை, அமைதி, ஒத்துழைப்பு ஆகிய கொள்கைகளை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது என்றும், 'போர் அல்ல; அமைதி, மோதல் அல்ல; ஒருங்கிணைப்பு' என்பதே இந்தியாவின் அணுகுமுறை என்று தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் வலுவான, பயனுள்ள உலகளாவிய வேளாண் ஒத்துழைப்புக்கு இந்த கொள்கைகள் அடித்தளமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், காலநிலை மாற்றம், அதிகரிக்கும் உற்பத்திச் செலவு, வேளாண் சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள சிறு, குறு விவசாயிகள் சவால்களை சந்தித்து வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இவற்றை கூட்டாக எதிர்கொள்வதற்கு ஒரு முக்கி தளமாக இந்த மாநாடு அமைந்துள்ளதாகவும், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, நிலையான வேளாண் வளர்ச்சி ஆகியவற்றை வலுப்படுத்துவதில் சிறு விவசாயிகளின் நலன் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.
அத்துடன், சிறு, குறு விவசாயிகள் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவடைந்தால் உலகின் உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பு வலுவானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும் மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சியில் பெண்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது என்றும், வேளாண் மாற்றத்தின் மிக வலுவான அடித்தளங்களில் ஒன்று பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்று பேசியுள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் வேளாண்மை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் தலைமைப் பொறுப்புகளை ஏற்று வருகின்றதாக்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 'ட்ரோன் தீதி' போன்ற முன்னெடுப்புகள் கிராமப்புற இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் சமூக மாற்றத்தின் அடையாளங்களாக மாறி வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நவீன விவசாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறதாகவும், விவசாயத்துடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான சூழலையும் உருவாக்க உதவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேப்போன்று இந்தியாவின் உணவு உற்பத்தி 37.60 கோடி டன்களை எட்டியுள்ளதாகவும் வேளாண் துறையின் வளர்ச்சி 4.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரிக்ஸ் நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு தேவை என்றும், சிறு விவசாயிகளை வலுப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், உலகம் முழுவதும் நிலையான விவசாய வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
English Summary
Union Minister announces at the BRICS Agriculture Conference that India's food production has reached 376 million tonnes