வீட்டு வேலைக்குச் சென்ற இடத்தில் விபரீதம்...! பாலியல் அத்துமீறலை எதிர்த்த பெண் அடித்துக் கொலை...! - தொழிலதிபர் கைது...!
tragedy occurred place where she went housework woman who resisted harassment beaten death Businessman arrested
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஒசக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட சூலிபெலே பகுதியில் வசித்து வந்தவர் தீபக் கிருஷ்ணா. செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த தொழிலதிபரான இவர், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடத்தில் பிரம்மாண்ட பங்களாவில் தனியாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது வீட்டில் உயர்ரக விலையுயர்ந்த இரண்டு நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தன. அவற்றை பராமரிக்கும் பணிக்காக கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஆண்டனி என்பவரின் மனைவி ஸ்மிதா (47) வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த அலினா மற்றும் சின்னு ஆகியோரும் வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 3-ந்தேதி ஸ்மிதா நாய்களுக்கு உணவு அளித்து கொண்டிருந்தபோது, அவரை வீட்டுக்குள் அழைத்த தீபக் கிருஷ்ணா, தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அதற்கு ஸ்மிதா எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனால் ஆவேசமடைந்த தீபக் கிருஷ்ணா, வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் ஸ்மிதாவை கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கொடூர தாக்குதலை தடுக்க முனைந்த அலினா மற்றும் சின்னுவையும் கத்தியை காட்டி மிரட்டி, “இங்கு நடந்ததை வெளியே சொன்னால் உயிருடன் விடமாட்டேன்” என்று எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்திருந்த ஸ்மிதாவை அலினா மற்றும் சின்னு மீட்டு, சூலிபெலேவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருச்சூரிலுள்ள ஜூபிலி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், மருத்துவர்களின் தீவிர போராட்டத்தையும் மீறி ஸ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதுகுறித்து ஸ்மிதாவின் கணவர் ஆண்டனி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், பின்னர் விசாரணையை சூலிபெலே காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
தொடர்ந்து தீபக் கிருஷ்ணாவை கைது செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, சில தினங்களுக்கு முன்பு மதுபான விடுதியில் தகராறு செய்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பரபரப்பை ஏற்படுத்திய வழக்கிலும் அவர் சிக்கியிருந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து தீபக் கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள், அவரை சிறையில் அடைத்தனர். இந்த கொடூர சம்பவம் சூலிபெலே பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
tragedy occurred place where she went housework woman who resisted harassment beaten death Businessman arrested