திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு: மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்!
Tirupati temple siruthai nadamattam
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் பதிவு செய்யப்பட்டதால் பக்தர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் அலிப்பிரி விநாயகர் கோவில் அருகே உள்ள கனுமா சாலையில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது. அப்போது நடைபாதையில் சென்ற பக்தர்கள் திடீரென அதைக் கண்டு பதற்றத்துடன் ஓடிச் சென்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைப் பரிசோதித்தபோது, சிறுத்தை தெளிவாக நடமாடும் காட்சி உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தேவஸ்தான பாதுகாப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் மலைப்பாதை முழுவதும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
மேலும், சிறுத்தையைப் பிடிக்க அப்பகுதியில் கூண்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினர் “சிறுத்தை அல்லது வேறு வனவிலங்குகள் அருகே செல்ல வேண்டாம், குறிப்பாக குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்லுங்கள். கூட்டமாக மட்டுமே நடைபாதையில் செல்ல வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், நேற்று திருப்பதி மலையில் 66,675 பக்தர்கள் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்தனர். அவர்களில் 24,681 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். அன்றைய தினத்தில் ரூ.3.32 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், அதிகமான கூட்டம் காரணமாக சுமார் 12 மணி நேரம் காத்திருந்து மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக தற்போது மலைப்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
English Summary
Tirupati temple siruthai nadamattam