ரியல் எதிரி யார் என்றே மத்திய அரசுக்கு தெரியவில்லை.. இந்திய ராணுவ தகவல்களை சீனாவிடம் பகிர்ந்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
The central government doesnot know who the real enemy is Rahul Gandhi accuses India of sharing military information with China
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் இலக்குகள் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களையும் சீனா, பாகிஸ்தானுடன் பகிர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளதாக கூறினார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, “1971-ம் ஆண்டின் போர் காலத்தில் அந்நேர பிரதமர் இந்திரா காந்தி பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கினார். எந்தவொரு வல்லரசுக்கும் தலைவணங்கவில்லை. ஆனால் இன்றைய பிரதமர் மோடிக்கு அதே தைரியம் இல்லை” என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா–பாகிஸ்தான் இடையிலான சண்டையை 29 முறை நிறுத்தியதாக கூறியிருப்பதைத் தட்டி கேட்ட ராகுல், “டிரம்ப் பொய் சொல்கிறார் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூற தயாரா?” என சவால் விடுத்தார். இந்திய ராணுவத்துக்கு எந்தக் குறையும் இல்லை; ஆனால் அரசியல் உத்தரவுகளால் தான் ராணுவ நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும், விமானங்களை இழந்ததற்கும் காரணம் மோடிதான் எனவும் கூறினார்.
மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கை குறித்து விமர்சித்த ராகுல், “இந்தியாவின் வெளியுறவு கொள்கை திவாலாகி விட்டது. சீனா என்ற வார்த்தையை கூட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சொல்ல பயப்படுகிறார்கள். உண்மையான எதிரி சீனாவே என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என விமர்சித்தார்.
மேலும், “பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேவையான ரகசியங்களை சீனா நேரலையில் வழங்கி வருகிறது. இதை மத்திய அரசு பலமுறை எச்சரிக்கப்பட்டும் தட்டிக்கேட்கவில்லை” என்றும் அவர் குற்றம்சாட்டினார். “தீவிரவாதி தொடர்பாக கேள்வி எழுப்பினாலே பாகிஸ்தான் ஆதரவாளர் என்று சித்தரிக்க முயல்கிற பாஜக, சீனாவைப் பற்றிய எந்தவொரு பேசும் துணிவும் காட்டவில்லை” என அவர் விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள், நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவிலும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தற்போது மத்திய அரசு அல்லது பாஜக தரப்பில் இருந்து இதற்கு பதிலளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
The central government doesnot know who the real enemy is Rahul Gandhi accuses India of sharing military information with China