டெல்லி கார் குண்டு வெடிப்பு எதிரொலி: 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
terror tainted Al Falah University ED raids Delhi
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி மாலை நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். இச்சம்பவத்தை தேசியப் புலனாய்வு முகமை (NIA) பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அமலாக்கத்துறையினர் (ED) விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் பயின்றதாகக் கூறப்படும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் தலைமையிடமாகக் கொண்ட அல் ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
டெல்லி மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள 24 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட சில நபர்களிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திகியின் சகோதரர் மஹ்மூத் அஹ்மத் சித்திகி (50) நேற்று ஹைதராபாத்தில் மத்தியப் பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், இவர் 25 ஆண்டுகளுக்கு முந்தைய மோசடி வழக்குகளில் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், கார் வெடிப்புச் சம்பவத்துடன் இவருக்கு நேரடித் தொடர்பில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் இந்தச் சோதனைகள் மூலம் விசாரணை தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
terror tainted Al Falah University ED raids Delhi