'விசாரணைக்கு பயந்தும் சலுகைகளுக்கு ஆசை பட்டும் பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ்க்கு எதிராக சதி செய்துள்ளனர்'; தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு..!
Tejashwi Yadav alleges that JDU leaders have conspired against Nitish in collusion with the BJP
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கிக்கொள்வோமோ என்ற அச்சத்தின் காரணமாகவே, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலகுவதற்காக அவருக்கு எதிராகச் சதி செய்துள்ளதாக பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசு போது குற்றம்சாட்டியுள்ளார்.
நிதிஷ்குமார் பதவி விலகுவது தொடர்பான முடிவு, சட்டப்பேரவைத் தேர்தலின் போதே எடுக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அதனை வெளிப்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அத்துடன், கடந்த 2025 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்வர் நிதிஷ் குமார் நீண்ட காலத்திற்குப் பதவியில் நீடிக்க மாட்டார் என்று நான் கணித்தது தற்போது உண்மையாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது, தேர்தல் சமயத்தில் அரசியல் ரீதியான பின்விளைவுகளுக்கு அஞ்சி, அவர்களால் நிதிஷை ஓரங்கட்ட முடியவில்லை என்றும், ஆனால் இது தொடர்பாக அவர்களுக்குள் அப்போதே ஒரு ரகசியத் திட்டம் இருந்ததாகவும், அது இப்போது நடந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜேடியுவின் மூத்த தலைவர்கள் மத்திய விசாரணை முகமைகளின் மீதான அச்சத்தினாலோ அல்லது ஏதேனும் சலுகைகளுக்கு ஆசைப்பட்டோ, பாஜகவுடன் சேர்ந்து இந்த சதியை மேற்கொண்டிருப்பதாகத் கூறியுள்ளார். அத்துடன், அவர்கள் நிதிஷ் குமாரை இப்போது ஒரு பொறியினுள் சிக்க வைத்துவிட்டதாகவும், அவரோ (நிதிஷ்) விருப்பமில்லாமலேயே மாநிலங்களவைக்குச் செல்ல முடிவெடுத்திருப்பதாகத் தோன்றுகிறது என்று தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார்.
மேலும், அராரியாவில் ஒரு நபர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது, ஜெகானாபாத்தில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, மாநிலத்தில் கொடூரமான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன என்று பீகார் அரசை விமர்சித்துள்ளார்.
இந்த சூழலில், என்டிஏ கூட்டணிக் கட்சிகளும் அதன் தலைவர்களும், புதிய முதல்வர் முகத்தைத் தேடும் இசை நாற்காலி விளையாட்டிலேயே மும்முரமாக உள்ளனர் என்று கடுமையாக சாடியுள்ளார். ஆட்சி நிர்வாகம் என்பது அவர்களின் நிகழ்ச்சி நிரலிலேயே இல்லை என்றும், கடந்த இரண்டு மாதங்களாக அமைச்சரவைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்று தேஜஸ்வி யாதவ் பீகார் அரசை விமர்சித்துள்ளார்.
English Summary
Tejashwi Yadav alleges that JDU leaders have conspired against Nitish in collusion with the BJP