டிரம்ப் ட்வீட் போதும்… இந்திய பங்குச்சந்தை ராக்கெட் வேகத்தில் உயர்வு...!
single tweet from Trump enough Indian stock market soared at rocket speed
பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், பங்குச் சந்தைகளில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. பங்குகள் வாங்கும், விற்கும் பரிவர்த்தனைகளுக்கான வரி உயர்த்தப்பட்டதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்து, விற்பனை அழுத்தம் அதிகரித்தது. அதன் தாக்கமாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கும் மேலாக சரிந்தது; தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் சுமார் 500 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்த சரிவு சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.இதுகுறித்து டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, அமெரிக்காவிலிருந்து தேவையானால் வெனிசுலாவிலிருந்தும், அதிக அளவில் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் உள்ள நட்பு மற்றும் அவரது கோரிக்கையை மதித்து, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்தியா–அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவின் பரஸ்பர வரி 25% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு சந்தைக்கு புத்துயிர் ஊட்டியது. இதன் விளைவாக இந்திய பங்குச் சந்தைகள் அதிரடி மீட்சியை பதிவு செய்தன. சென்செக்ஸ் ஒரே நாளில் 4,000 புள்ளிகள் வரை பாய்ந்தது; நிஃப்டி 1,200 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது.
காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 84,000 புள்ளிகளிலும், நிஃப்டி 25,750 புள்ளிகளிலும் வலுவாக நிலை கொண்டுள்ளது.
English Summary
single tweet from Trump enough Indian stock market soared at rocket speed