சிவப்பு எச்சரிக்கை! கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை...!
Red alert Heavy rains lash five districts in Kerala
இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதிலிருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனிடையில் ஒரு சில நாட்கள் மட்டும் மழை குறைந்தநிலையில், தற்போது மீண்டும் அங்கு பலத்த மழை பொழிய தொடங்கியிருக்கிறது. இதில் வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்க்கிறது.

மேலும், பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் அன்றாடவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.இந்த மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் கண்ணூர், வயநாடு, காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாலக் காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.மேலும், காசர்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்கள், ஆலப்புழா மவட்டத்தில் குட்டநாடு மற்றும் அம்பலப்புழா தாலுகாக்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. பலத்த மழை காரணமாக கொல்லம் அருகே உள்ள போலயாதோடு பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
Red alert Heavy rains lash five districts in Kerala