வரும் செப்டம்பர் 13-இல் பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார்..!
Prime Minister Modi will visit Manipur on September 13th
மணிப்பூரில், கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக, வரும் 13-ஆம் தேதி அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில், பைராபி-சாய்ராங் இடையே, 51.38 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது, அசாமின் சில்சார் வழியாக, மிசோரமை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. இந்த ரயில் திட்டத்தை தொடங்கிவைக்க பிரதமர் மோடி வரும் 13-ஆம் தேதி மிசோரம் செல்லவுள்ளார். அத்துடன், அன்றைய தினமே மணிப்பூருக்கு செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில், கூகி - மெய்டி பிரிவினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக கலவரம் வெடித்தது. இதில், 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் இடம்பெயர்ந்துள்ளனர். பின்னர் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையால் மணிப்பூர் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.

எனினும் அங்கு அவ்வப்போது சில அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து, மாநில முதல்வராக இருந்த பா.ஜ., மூத்த தலைவர் பைரேன் சிங், கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்த நிலையில்,மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளான வன்முறை நடந்த நிலையிலும், மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட செல்லவில்லை என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தன. இந்நிலையில், கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின், வரும் 13-ஆம் தேதி பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Prime Minister Modi will visit Manipur on September 13th